2007 ஏப்பிரல்
(பக்கம் 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35 )
தொல்காப்பிய ஆய்வின் அணுகுமுறை
க. பாலசுப்பிரமணியன்
இயக்குநர் [ஓய்வு], மொழியியல் உயராய்வு மையம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
தொல்காப்பியம் நமக்கு இன்று கிடைக்கும் முதற்பழந்தமிழ் இலக்கண நூல். எனினும் அது தமிழின் முதல் இலக்கண நூல் அல்ல. உறுதியாகக் கால்கொண்டிருந்த தமிழ் இலக்கண மரபின் அடிப்படையில் உருவானது. பழைய உலக இலக்கண மரபுகளான கிரேக்க, உரோமானிய, வடமொழி மரபுகளிலிருந்து வேறுபட்டது (ஒ.நோ. அகத்தியலிங்கம், பாலசுப்பிரமணியன், 1974; பாலசுப்பிரமணியன், 2001: 82◌116). தொல்காப்பியத்திற்கு முந்தைய தமிழ் இலக்கண நூல்கள் இன்று கிடைக்கப் பெறாமையின் பழந்தமிழ் இலக்கண மரபின் ஒரே எடுத்துக்காட்டு வடிவமாக இன்று விளங்குவது. ஏனெனில், பின்வந்த இலக்கண நூல்கள் அனைத்தும் வடமொழி இலக்கண மரபின் தாக்கத்திற்கு உள்ளானவை (பாலசுப்பிரமணியன், 2001: 19◌36). எனவே தொல்காப்பியத்தின் கொள்கைப் பின்னணி, ஆராயப்படும் இலக்கணக் கூறுகளின் சிறப்பு, இலக்கணம் கூறும் முறை இவற்றைச் சரியாகப் புரிந்துகொள்ளுதல் பழந்தமிழ் இலக்கண மரபு என்ன என்று அறிந்து மீட்டுருவாக்கம் செய்வதற்கு இன்றியமையாதது ஆகும். தொல்காப்பிய ஆய்வின் நோக்கம் இதுவாகவே அமைய வேண்டும்.
தொல்காப்பிய ஆய்வின் தொடக்கமாக இளம்பூரணம் தொடங்கிய உரை நூல்களைக் கொள்ளலாம். இன்று நமக்கு விளங்காத, மொழி, பண்பாட்டு, வரலாற்றுக் காரணங்களால் உரைகள் அனைத்துமே தொல்காப்பியம் இயற்றப்பட்டு ஆயிரம் ஆண்டுகட்குப் பிறகே எழுதப்படலாயின. அக்கால கட்டத்திலேயே வடமொழி இலக்கண மரபின் தாக்கம் உரைகளில் காணப்படுகிறது. இன்றைய தொல்காப்பிய ஆய்வும் கடந்த நூற்றாண்டிலிருந்து தொடங்கியிருப்பினும் (கிருட்டினமூர்த்தி, 1990) பல்வகைத் தாக்கங்களுக்கு உள்ளாகியிருக்கிறது. இன்றைய மேனாட்டு இலக்கண மரபு, சென்ற நூற்றாண்டின் ஃபிலாலஜி (Philology) எனப்படும். வரலாறு தழுவிய மொழி ஆராய்ச்சி மரபு, இன்று வளர்ந்துவரும் மொழியியல் மரபின் பல்வகைப் போக்குகள் அனைத்தின் தாக்கமும் தொல்காப்பிய ஆய்வில் உள்ளன. இதன் விளைவு மூன்று அதிகாரங்கள் கொண்ட முற்றிலக்கண நூலாகிய தொல்காப்பியத்தை ஒரு முழு நூலாக ஆராயாமல், பகுதிபகுதியாகப் பிரித்து எழுத்திகாரமும் சொல்லதிகாரமுமே மொழி அமைப்பைப் பேசுபவை; பொருளதிகாரம் அவற்றோடு தொடர்பற்ற பகுதி; அது பேசுவது இலக்கிய இலக்கணம், அணியிலக்கணம், ரசக்கோட்பாடு ஆகியவை என விளக்கப் படுகின்றன. இக்கருத்து வேறுபாட்டின் உச்சக்கட்டமாக எழுத்து, சொல்லதிகாரங்களே தொல்காப்பியரால் செய்யப்பட்டவை; பிற்கால ஆசிரியரால் பொருளதிகாரம் செய்யப்பட்டுப் பின்னால் இணைக்கப்பட்டது என்ற கருத்தும் உருவாயிற்று (ஒ.நோ. செல்வநாயகம், 1969, சுவலபில் 1970:20 F.N., 23; 1974 F.N., 67). இவ்வனைத்திற்கும் காரணம் தொல்காப்பிய ஆய்வின் அணுகுமுறையில் உள்ள குறைபாடுகளே. தொல்காப்பியத்தில் ஆசிரியர் கூறியுள்ள செய்திகளை, அவர் கொள்கைப் பின்னணியை, பிறமரபுகளின் தாக்கமின்றி முழுமையாகப் புரிந்துகொள்ள ஆய்வு அணுகுமுறை எவ்வாறு அமையவேண்டும் என்பதை இக்கட்டுரை ஆராய்கிறது. இவ்வணுகுமுறை (1) அறிவியல் வரலாற்று அணுகுமுறை, (2) மொழி வரலாற்று அணுகுமுறை, (3) ஒருங்கிணைந்த அணுகுமுறை, (4) அகநோக்கு, (5) தொல்காப்பிய அமைப்புத் தருக்க முறை அடிப்படையிலான அணுகுமுறை, (6) தொல்காப்பியத் தரவு அடிப்படை அணுகுமுறை என ஆறு வகைகளாகப் பிரித்துக் காணப்படுகிறது.
1. அறிவியல் வரலாற்று அணுகுமுறை
இலக்கண நூல் மொழிஅறிவியல் அல்லது மொழியியல் ஆய்வின் பயனாக எழுதப்படுவது. எனவே, ஒரு பழங்கால இலக்கண நூல் அறிவியல் வரலாற்றுக் (History of Science) கண்ணோட்டத்தில் ஆராயப்பட வேண்டும். அவ்விலக்கண நூல் தோன்றிய மொழியில், அத்துறையின் வளர்ச்சி வரலாற்றில், அந்நூலின் இடம், பங்களிப்பு ஆகியவை கண்டறியப்பட வேண்டும். அவ்வாறு ஆராயும் பொழுது, மொழியியலின் சுருக்க வரலாறு என்ற நூலில், ராபின்ஸ், அறிவியல், மொழியியல் வரலாற்று ஆய்வுபற்றிக் கூறும் பின்வரும் கருத்துகள் உட்கொள்ளப்பட வேண்டும். "ஓர் அறிவியல் துறையின் நோக்கங்கள் அதன் வரலாற்றில் காலப் போக்கில் மாறுபடுகின்றன. கடந்த கால ஆய்வுகளில் இன்றைய ஆய்வுக்குத் தொடர்புடையவற்றை மட்டும் தேர்ந்தெடுத்து ஆராயும் போக்கு தவிர்க்கப்பட வேண்டும். இன்றைய மொழியியலின் தர நிர்ணயக் கோட்பாடுகளைக் கடந்தகால வரலாற்று மொழியியலுக்கு உரியது எது என நிர்ணயம் செய்யப் பயன்படுத்தாமல், மொழியின் எந்தக் கூறுகள் சிறப்புடையனவாகவும், ஆராயத் தகுதி உடையனவாகவும், முறையான ஒழுங்கமைப்பு உடைய ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டனவோ அவை மொழியியல் வரலாற்றுக்கு உரியவை என உணர்ந்து புரிந்துகொள்ள வேண்டும்” (ராபின்ஸ், 1967: 2-4).
இக்கண்ணோட்டத்தில் தொல்காப்பியச் செய்திகள் அனைத்தும் மொழியமைப்புக்கு உரியனவாகவே கருதப்பட்டு ஆராயப்பட வேண்டும். இரண்டு அதிகாரங்கள் மொழி அமைப்புப்பற்றிப் பேசுவனவாகவும், மூன்றாம் அதிகாரம் வேறு செய்திகளைப் பேசுவதாகவும் கொள்வது அறிவியல், வரலாற்று அணுகுமுறைக்குப் பொருந்தாது. அவ்வாறு செய்வது இன்றைய மொழியியல் ஆய்வின் தரக் கோட்பாடுகளையும், வடமொழி போன்ற இலக்கண மரபுகளின் கொள்கை அடிப்படையையும் தொல்காப்பிய ஆய்வில் வலிந்து திணிப்பதாகவே அமையும். அது தனித்து நிற்கும் தொல்காப்பியரின் மொழி அமைப்புக் கொள்கையைப் புரிந்து கொள்வதற்கும் தடையாக அமையும். அவ்வாறன்றிப் பொருளதிகாரச் செய்திகளும் மொழியமைப்பிற்குரியனவே என்று காணும் பொழுது தொல்காப்பியரின் கொள்கைப் பின்னணியும் தொல்காப்பியத்திற்கு அடிப்படையான மொழி இலக்கண மாதிரிப் படிவமும் (theoretical model) புலனாகும். எனது அண்மைக்கால ஆய்வுகள் (பாலசுப்பிரமணியன், 1998, 1999, 2000) இவற்றை விளக்குகின்றன. அவற்றில் பொருளதிகாரம் ஆய்வது பழந்தமிழ் மொழியின் பொருண்மை அமைப்பே (Semantic structure) உவமவியல், மெய்ப்பாட்டியல், மரபியல் செய்திகளும் பொருண்மை அமைப்பிற்கு உரியனவே; செய்யுளியல் மட்டுமே இலக்கிய அமைப்பைப் பேசுவது எனக் கூறியுள்ளேன். அது பின்னர்ச் (5) சுருக்கமாக விளக்கப்படும்.
2. மொழிவரலாற்று அணுகுமுறை
இரண்டாயிரம் ஆண்டுகட்டு முன்பு எழுதப்பட்ட பழந்தமிழ் இலக்கணநூல் அன்றைய தமிழ் மொழியின் அமைப்பைப் பேசுவதே. காலப் போக்கில் மாற்றம் அடைவது மொழியின் இயல்பு.
கடிசொல் இல்லை காலத்துப் படினே ( தொல். சொல். 446 )
பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகையி னானே ( நன். 462 )
ஆகிய தொல்காப்பிய, நன்னூல் நூற்பாக்கள் மொழியின் மாற்றமடையும் இயல்பைத் தமிழ் இலக்கண ஆசிரியர் உணர்ந்திருந்தனர் என்பதைக் காட்டுகின்றன. ஆனால், உரையாசிரியரும் பிற்கால ஆய்வாளரும் தொல்காப்பிய நூற்பாக்களின் பொருளை அவ்வக்கால மொழி அமைப்பிற்கேற்ப மாற்றி அமைத்துக்கொள்கின்றனர். இது மொழி வரலாற்றின் உண்மைக்கு மாறானதாகும். பின்வரும் எடுத்துக்காட்டுகள் உரையாசிரியரும் ஆய்வாளரும் மொழி மாற்றத்தைக் கருத்திற் கொள்ளாது அவர்கால மொழியமைப்பிற்கு ஏற்பப் பொருள் கொண்டமையைக் காட்டும். எழுத்ததிகாரத்தில் வரும்.
மெய்யீறெல்லாம் புள்ளியொடு நிலையில் ( தொல். எழுத்து. 105 )
குற்றியலுகரமும் அற்றென மொழிப ( தொல். எழுத்து. 106 )
புள்ளீயிற்றுமுன் உயிர் தனித்து இயலாது மெய்யொடும் சிவணும் அவ்வியல் கெடுத்தே (தொல்.எழுத்து. 139)
ஆகிய நூற்பாக்களின் பொருள், மூலபாடத்தின் அடிப்படையில் கொண்டால் பின்வருமாறு அமையும்.
"மொழியீற்று மெய்கள் வரிவடிவில் புள்ளி பெறும் (105), மொழியீற்றுக் குற்றியலுகரங்களும் ஈற்று மெய்கள் போலப் புள்ளி பெறும் (106), புள்ளியீற்று எழுத்துகள் உயிர் முதன் மொழி வரும் பொழுது தனித்து ஒலிக்கப்படா; தம் தனி இயல்பை இழந்து வருமொழி மெய்யொடு சேரும் (139)".
உரையாசிரியர் காலத்து, ஈற்றுக் குற்றியலுகரம் புள்ளியிட்டு எழுதப்பெறும் வழக்கம் மாறியிருக்க வேண்டும். எனவே "குற்றியலுகரமும் அற்றென மொழிப (105)" என்று நூற்பாவிற்கு மாட்டேற்றால் வரும் நேர்பொருளை, "மொழி ஈற்றுக் குற்றியலுகரம் புள்ளிபெறும்" என்ற பொருளைத் தராது, முந்தைய "மெய்யீறெல்லாம் புள்ளியொடு நிலையல்" (105) என்ற நூற்பாவிற்கு "ஈற்று மெய் புள்ளிபெறும்" என்ற நேர்பொருளொடு, உயிர் முதன் மொழி வந்தவிடத்து அஃதேற இடம் கொடுக்கும்' என்ற பொருளையும் உய்த்துக்கொண்டு அடுத்த நூற்பாவிற்குரிய மாட்டேறு ஒருபுடைச் சேறல் என்ற உத்தியின் படி "குற்றியலுகரம் உயிரேற இடங்கொடுக்கும்" என்பதே பொருளாக உரையாசிரியர் கொள்கின்றனர். (அடிகளாசிரியன் (இளம்பூரணம்) 1969: 103). பின் "புள்ளீயிற்றுமுன்", (139) என்று தொடங்கும் புணரியல் நூற்பாவிலும் இவ்வாறே உம்மையால் பொருள் கொள்கின்றனர் (அடிகளாசிரியன், 1969:136; இராம. கோவிந்தசாமிபிள்ளை, 1967:131, 132).
உரையாசிரியர்கள் நூற்பா வரிசை முறையைப் பொருட்படுத்தாமல் அவர் கால எழுத்து முறையை உள்ளடக்கிக் கூறிய விளக்கம், பழந்தமிழ் ஒலியனியல் கூறு ஒன்றைப் புரிந்து கொள்ளாமையைக் காட்டுகிறது. மெய்யீற்றுச் சொற்களும் உயிர் முதல் மொழியும் அடுத்துவரும் தொடர்களின் அசை அமைப்பும் (syllabic structure) உயிரீற்றுச் சொற்களும் உயிர்முதல்மொழியும் வரும் தொடர்களின்அசையமைப்பும் மாறுபடுகின்றன. குற்றியலுகர ஈற்றுச் சொல்லும் மெய்யீற்றுச் சொல் போலவே செயல்படுகின்றன.
1.
மணி + அரிது > மணி யரிது (mani + yaritu)
2.
அவன் + அமரன் > அவ னமரன் (ava + namaran)
3.
நாகு + அரிது > நா கரிது
தொடர் (1) இல் உயிரீற்று மொழி முன் உயிரீறு வரும்பொழுது இரு சொற்களின் அசை அமைப்பிலும் எந்த மாற்றமும் இல்லை. உடம்படுமெய் வருமொழியின் முதலசையுடன் சென்றுவிடுகிறது. ஆனால் மெய்யீற்றுச் சொல்லின் நிலைமொழியின் ஈற்றசையின் பகுதியாக இருந்த மெய் (a+van) வரு மொழி உயிருடன் சேர்ந்து வருமொழி முதலசையின் பகுதியாக மாறிவிடுகிறது (ava na +ma+ran). இதே அவன் என்ற சொல்.
4. வந்தான் + அவன்> வந்தா-னவன் (Vanta: na+van)
என்ற தொடரில் மாறிவருவதைக் காணலாம். குற்றியலுகர ஈற்று மொழியிலும் இது நடைபெறுகிறது (3) நாகு + அரிது> நா கரிது, இங்கே நிலைமொழி அசையே கெடுவதைக் காணலாம். இது பிணைப்பு (liaison) எனப்படும் ஓர் ஒலியனியல் கூறு. பழந்தமிழில் வழங்கி இக்காலத் தமிழில் மறைந்த ஒன்று. பிரெஞ்சு மொழியிலும் இன்றைய தெலுங்கிலும் இன்னும் வழக்கில் இருப்பது (எ-டு: French: cest◌arbre> ce. tarbre ‘It is a tree’ தெலுங்கு: வாடு எக்கடா > வா -டெக்டா 'அவன் எங்கே?' மாகு + ஒத்து > மா - கொத்து 'எங்களுக்கு வேண்டாம்' ஒ. நோ. சிதம்பரநாத செட்டியார், (1992:586(b)). இவ்வொலியியல் கூற்றினை விளக்கவே தொல்காப்பியரால் அம் மூன்று விதிகளும் அமைக்கப்பெற்றன. மொழி மாற்றத்தால் பிணைப்பு என்ற ஒலியினியல் கூற வழக்கு ஒழிந்ததாலும் எழுத்துமுறை மாற்றத்தாலும் உரையாசிரியர் அவர் கால மொழியமைப்பிற்கு ஏற்பப் பொருள் கூறிச் சென்றனர். இங்கே தொல்காப்பியர் புள்ளி என்ற வரிவடிவக் கூறை ஓர் இலக்கணம் கூறும் உத்தியாகப் (descriptive technique) பயன்படுத்தி உள்ளார். (ஒ.நோ. பாலசுப்பிரமணியன் 1997: 38).
உ ஊகாரம் நவ்வொடு நவிலா ( தொல். எழுத்து. 74 )
என்ற நூற்பா "மொழியீற்றில் நு, நூ, வு, வூ ஆகியவை வரா" எனச் சொல்கிறது. ஆனால் இவ்விதிக்கு முரணாக இன்றைய தொல்காப்பியப் பதிப்புகளிலேயே கவவு (தொல் பொ. 171.3) தரவு (தொல் பொ. 438.1) செலவு (தொல் பொ. 175) ஆகியவை போன்ற பல வுகர ஈற்றுச் சொற்கள் வருகின்றன. உரையாசிரியரும் இவை போன்ற மேலும் பல வுகர ஈற்றுச் சொற்களை எடுத்துக்காட்டாகக் காட்டி (கதவு, துரவு, குவவு, புணர்வு) அவற்றை உரையினுள் அடக்குகின்றனர். (இராம. கோவிந்தசாமி பிள்ளை (நச்சினார்க்கினியம், 1967-81). மொழி வரலாற்று நோக்கில் பார்த்தால் உண்மை விளங்கும். இவை புகர ஈற்றுச் சொற்கள் வுகரமாக மாறியவை. ஏடு பெயர்த்து எழுதுவோரால் அவர் காலத் தமிழ் மரபை ஒட்டி மாற்றி எழுதப்பட்டவை. குமாரசாமி ராஜா (1974) "குற்றுகரமா? முற்றுகரமா?" என்ற கட்டுரையில் இவ்வுகர ஈற்றுச் சொற்கள் குற்றியலுகர ஈற்றுச்சொற்கள் போலச் சந்தியில் புணர்வதை எடுத்துக்காட்டுகிறார். தொல்காப்பிய நூற்பாவிலேயே
செலவுறு கிளவியும் செலவழங்குகிளவியும் ( தொல். பொருள். 175-4 )
செலவு + உற > செலவுறு; செலவு + அழுங்கு > செலவழங்கு
என உகரங்கள் மேலே விளக்கப்பட்ட குற்றியலுகர ஈற்றுச் சொற்கள் போலப் புணர்ந்து உகரம் கெட்டு உயிரேற இடங்கொடுத்துள்ளன. வுகர ஈறாயின் முற்றுகரமாய் உடம்படுமெய் பெற வேண்டும். அவ்வாறன்றி உகரம் கெடுவதற்குக் காரணம். தொல்காப்பியர் காலத்தில் அவை புகர ஈற்றுச் சொற்கள். அவை அன்று கவபு, தரபு, செலபு எனவே வழங்கியிருக்க வேண்டும். மொழியிடை இரு உயிர்களுக்கிடையில் வரும் பகரம் வகரமாக மாறுவது ஒலி மாற்றம் (phonetic change). தொல்காப்பியப் பழைய படிகள் சிலவற்றில் புகர, வுகர ஈற்றுப் பாடவேறுபாடு காணப்படுவது இம்மாற்றத்தை உறுதி செய்யும் சான்றாகும். நூன்மரபு நூற்பா
புள்ளியில்லா எல்லா மெய்யும்
உருவுருவாக அகரமொ டுயிர்த்தலும்
ஏனை உயிரோ டுருவு திரிந்துயிர்த்தலும்
ஆயீரியில உயிர்த்த லாறே (தொல். எழுத்து. 17)
என்பதில் "உருவுருவாகி, உருவுதிரிந்து" என்பவற்றிற்கு "உருபுருவாகி, உருபு திரிந்து" என்ற பாடங்களும் உள்ளன (அடிகளாசிரியன் (இளம்பூரணம்) 1969: 42), இவை ஒலிமாற்றத்தைத் தெளிவாகக் காட்டுகின்றன. எனவே மேற்கூறிய இடங்களில் மட்டும் அன்றி தொல்காப்பியம் முழுவதையும் மொழி வரலாற்றுக் கண்ணோட்டத்தில் அணுகி, தொல்காப்பியர் காலத்துப் பழந்தமிழ் மொழியமைப்பை உட்கொண்டு பொருள் காணுதல் நூலாசிரியர் கருத்தைச் சரியாகப் புரிந்துகொள்ள அவசியமாகும்.
3. ஒருங்கிணைந்த அணுகுமுறை
மேல் முன்னுரையில் (0) இன்றைய ஆய்வாளர் தொல்காப்பியத்தை ஒரு முழுநூலாக ஆராயமல் பகுதிபகுதியாகப் பிரித்து எழுத்ததிகாரத்தையும் சொல் அதிகாரத்தையும் ஒரு பகுதியாகவும் பொருளதிகாரத்தை இன்னொரு பகுதியாகவும் ஆராய்வதாகக் கூறினேன். அவை பிளவுபட்ட அல்லது பிரித்து நோக்கும் ஆய்வுகள். அதற்குக் காரணம் உலக இலக்கண மரபுகள் அனைத்திலும் இலக்கணம், வியாகரணம் grammar என்ற தலைப்பின் கீழ் ஆராயப்படும் செய்திகள் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம் என்ற இரு அதிகாரங்களுக்குள்ளேயே ஆராயப்பட்டு, பொருளதிகாரத்தில் அவற்றிற்குத் தொடர்பற்றவை போலத் தோன்றும் வேறு செய்திகள் ஆராயப்படுவதே.
ஒரு நூலில் அடிப்படையான பொருண்மை (subject) யிலிருந்து வேறுபடுவன போன்ற சில செய்திகள் கூறப்பட்டிருப்பின் அந்த நூல் அடிப்படைப் பொருளை அன்றி இரண்டாவது பொருளையே பேசுவதாகக் கருதி ஆராய்வது பொருத்தமற்றதாகும். அந்த இரண்டாவது பொருள் அடிப்படைப் பொருளோடு எந்த வகையிலாவது தொடர்பு கொண்டதா என்பதையும் காணவேண்டும். இன்றைய அறிவியல் ஆய்வுகள் அனைத்தும் உலக இயற்கையிலும் சமுதாயத்திலும் காணப்படும் அனைத்துப் பொருண்மைகளும் ( phenomena ) ஒன்றுடன் ஒன்று தொடர்பு உடையவை என்பதைக் காட்டுகின்றன; எனவேதான், உயிரியலும், வேதியியலும் இணைந்த உயிர் வேதியியல் (bio-chemistry) போன்ற அறிவியல் துறைகளும், சமுதாய உளவியல் (social-psychology), சமுதாய மொழியியல் (socio-linguistics) போன்ற துறைகளும் இன்று வளர்ச்சியடைந்துள்ளன. அடிப்படைப் பொருண்மைக்கும் சார்புப் பொருண்மைக்கும் உரிய செய்திகள் பேசப்படுவதாலேயே அது சார்புப் பொருண்மையை ஆராயும் நூல் என முடிவு செய்தல் கூடாது. இவ்வடிப்படையில், செய்யுள் அமைப்பு, உவமையாகிய அணி பற்றிய செய்திகள், வடமொழி ரசக் கோட்பாட்டுடன் ஒப்பிடக்கூடிய மெய்ப்பாடு ஆகியவை பொருளதிகாரத்தில் பேசப்படுவதால் அது இலக்கியவியல்பற்றி ஆராய்வதாகக் கொள்வது பொருத்தமற்றதாகும். இச்செய்திகள் மொழி அமைப்புடன் கொண்டுள்ள தொடர்பைப் புரிந்து கொண்டு மூன்று அதிகாரங்களையும் ஒரே நூலாகவே தொல்காப்பியர் செய்து உள்ளதால், அவருடைய நோக்கம் "வடவேங்கடம் தென்குமரி" ஆயிடை நிலத்து "வழக்கும் செய்யுளுமாய்" அமைந்த தமிழ் மொழி அமைப்பை ஆராய்வதே எனக்கொண்டு ஆராய வேண்டும். இன்னொரு வகையாகச் சொன்னால் இது ஓர் ஒருங்கிணைந்த ஆய்வுமுறை (integrated approach) ஓர் அமைவொழுங்கை (system) துணை ஒழுங்கமைவுகளாகப் (sub◌systems) பகுத்து ஆராய்வது வசதிக்காகவே. அந்தத் துணை ஒழுங்கமைவுகள் தமக்கு உரிய தனித் தன்மைகளைக் கொண்டிருப்பினும் ஒன்றுடன் ஒன்று இணைந்தும் ஒன்றை ஒன்று சார்ந்துமே செயல்படுகின்றன. எனவே, தொல்காப்பியர் மொழியின் துணை ஒழுங்கமைவுகளாக வகுத்த எழுத்து, சொல், பொருள் என்ற மூன்றும் ஒருங்கிணைந்து செயல்படும் ஒரு முற்றொழுங்கமைவு எனக் கருதியே நூல் வகுத்துள்ளார். இந்த அடிப்படையிலேயே தொல்காப்பிய ஆய்வின் அணுகுமுறை அமைய வேண்டும்.
அவ்வாறு அமைந்த ஒருங்கிணைந்த அணுகுமுறையில் தொல்காப்பியத்தை முற்று நூலாகக் கொண்டு ஆராய்ந்தால் மேற் (1) கூறியதுபோலப் பொருளதிகாரச் செய்திகள் வழக்கும் செய்யுளுமாய் அமைந்த பழந்தமிழனின் பொருள் ஒழுங்கமைவுகளே (Semantic system); அகமும், புறமுமாய்ப் பேசப்படும் செய்திகள் உலக வழக்கின் நிகழ் பொருளாயும் செய்யுளின் பாடுபொருளாயும் அமைவது. வழக்கும் (பேச்சு) செய்யுளும் பழந்தமிழின் பயன்பாட்டுக் களங்கள் என்பதாலேயே என்பதும் பொருளதிகாரச் செய்திகளை மட்டும் தனித்துப் பார்ப்பது சரியான அணுகுமுறை அல்ல என்பதும் புலனாகும்.
4. அகநோக்கு
ஒரு நூலைப் பிற மரபுகளின் அடிப்படையில் ஆய்வது புறநோக்காகும் (External approach). அந்த நோக்கு அந்நூலாசிரியரின் உண்மையான ஆய்வு நோக்கத்தையும் அவர் கூறும் செய்திகளையும் அறிந்துகொள்வதற்குத் தடையாகும். இதுவரை வந்துள்ள தொல்காப்பிய ஆய்வுகள் பலவும் புறநோக்கில் அமைந்தனவாகவே உள்ளன.
சொல்லதிகாரம் வேற்றுமை மயங்கியலில் வரும்
வினையே செய்வது செயப்படு பொருளே
நிலனே காலம் கருவி என்றா
இன்னதற்கு இது பயனாக என்னும்
அன்ன மரபின் இரண்டொடும் தொகைஇ
ஆயெட்டென்ப தொழில் முதல் நிலையே ( தொல். சொல். 112 )
என்ற நூற்பா வினைச்சொல் இலக்கணம் உணர்த்துவதாக இளம்பூரணர், கல்லாடனார் ஆகியோரும் எழுவகை வேற்றுமையினும் காரக வேற்றுமை பேசுவதாகத் தெய்வச்சிலையாரும் தொழிலின் காரணம் அல்லது காரகத்தைப் பேசுவதாகச் சேனாவரையரும் வேற்றுமைப் பொருள்கள் தோன்றும் இடம் கூறுவதாக நச்சினியார்க்கினியரும் உரை கூறுகின்றனர் (ஆபிரகாம் அருளப்பன், வி. ஐ. சுப்பிரமணியம், 1963 : 492-499).
இந்நூற்பா தொல்காப்பியரின் வாக்கிய அமைப்புக் கொள்கையைப் புரிந்துகொள்ள அடிப்படையாய் அமையும் நூற்பா (ஒ. நோ. பாலசுப்பிரமணியன், 2001: 65◌82). வினைப் பயனிலை வாக்கியத்தில் வரக்கூடிய அடிப்படைப் பொருள் நிலைகளை (semantic primes) விளக்குபவை. மேம்போக்காக நோக்கும் பொழுது வடமொழிப் பாணினீயத்தில் பேசப்படும் காரகக் கொள்கையோடு சில ஒப்புமைகளைக் கொண்டவை. அதனோடு ஒப்பிட்டே உரையாசிரியர்களான தெய்வச் சிலையாரும், சேனாவரையரும் காரக வேற்றுமை அல்லது தொழிலின் காரணம் அல்லது காரகம் பற்றிப் பேசுவதாகக் கூறுகின்றனர். ஆனால் பாணினியின் காரகங்கள் வினைப் பயனிலை வாக்கியத்தில் அமையும் பெயர்த்தொடர்களின் தொடர்நிலை (syntactic) உறவுகளையே குறிப்பன. வினையை அவற்றுள் ஒன்றாகச் சேர்ப்பது வடமொழி மரபிற்குப் பொருந்தாத ஒன்று. இதை அறிந்துள்ள சேனாவரையர் "அஃதேல், தொழிலின் வேறாயது காரகமாகலின், வனைதற்றொழிற்கு அத்தொழில்தான் காரகமாமாறு என்னையெனின், வனைந்தான் என்பது வனைதலைச் செய்தான் என்னும் பொருட்டாகலின், செய்தற்கு வனைதல் செயப்படும் பொருள் நீர்மைத்தாய்க் காரகமாம் என்பது" (ஆபிரகாம் அருளப்பள், வி. ஐ. சுப்பிரமணியம் 1963: 494, 495). என்று விளக்குகின்றார். நச்சினார்க்கினியாரும் இதே போன்ற விளக்கம் கூறி "வினையும் தொழிலும் வேறு" என்ற விளக்கமும் கூறுகிறார் (ப. 496). இவ்விளக்கங்கள் அனைத்தும் தொல்காப்பியர் கருத்தை வடமொழி இலக்கணக் கொள்கை அடிப்படையில் விளக்க முயல்வதால் வரும் சிக்கல்களே. அவ்வாறன்றி அகநோக்கில் தொல்காப்பியரின் வாக்கிய அமைப்புக் கொள்கை, வேற்றுமை இலக்கணக் கொள்கை என்ன என்று அவர் நூலையே அடிப்படையாகக் கொண்டு ஆராய்வது சரியானதாகும். தொல்காப்பியரின் வாக்கிய அமைப்புக் கொள்கை (Tolkappiyar’s concept of sentence structure) என்ற கட்டுரை (பாலசுப்பிரமணியன், 2001) தெளிவாக விளக்குகிறது. தொல்காப்பியத்தைப் பாணினி எழுதிய அஷ்ட்டாத்தியாயீயையும் ஒப்பிட்டுத் (பாலசுப்பிரமணியன், 1978, 2001: 101-113) தொல்காப்பியரின் வேற்றுமைக் கொள்கை எவ்வாறு பாணினியின் காரகக்கொள்கையுடன் வேறுபடுகிறது என்பது காட்டப்பட்டுள்ளது. மேற்கூறிய வேற்றுமை மயங்கியல் நூற்பாவின் சிறப்பை அகநோக்கில் சுருக்கமாக இங்கே காணலாம்.
தொல்காப்பியர், சொல்லிலக்கணத்தை அல்லது சொல் எனப்படும் பொருளுடைய உருபன்களை அடிப்படை அலகுகளாகக் கொண்ட வாக்கிய அல்லது தொடர் இலக்கணத்தை வேற்றுமையின் அடிப்படையில் விளக்குகிறார். இவ்வடிப்படை எழுத்ததிகாரத் திலும் மேற்கொள்ளப்பட்டு புணர்ச்சி, அல்வழி, வேற்றுமை எனப் பிரிக்கப்படுகிறது. அதனாலேயே சொல்லதிகாரத்தில் மூன்று இயல்கள் வேற்றுமைக்காக ஒதுக்கியுள்ளார். கிளவியாக்கம் என்னும் முதல் இயலுள் திணை, பால் பாகுபாடு, வாக்கியத்துள் எழுவாய், பயனிலை இயைபு (concord), வழு, வழுவமைதி, வினா, விடை போன்ற தொடரின் பொதுவிலக்கணங்கள் பேசி, வேற்றுமையியல், வேற்றுமைமயங்கியல், விளிமரபு ஆகிய மூன்று இயல்களில் வேற்றுமை அடிப்படையில் வாக்கிய அமைப்பைப் புறநிலை (Surface structure) அல்லது வேற்றுமை வடிவத்தின் (Case form) அடிப்படையிலும் புதைநிலை (Deep structure) அல்லது வேற்றுமைப் பொருள் (Case meaning) அடிப்படையிலும் விளக்குகிறார். வேற்றுமையியலில், வேற்றுமை வடிவின் அடிப்படையில் ஏழு புறநிலை வேற்றுமைகள் வகுக்கப்பட்டு அவற்றின் பொருண்மை, வாக்கியத்தில் அவற்றின் பங்கு ஆகியன விளக்கப்படுகின்றன. இவ்வியலில் பெயர்ப் பயனிலை வாக்கியங்கள், வினைப்பயனிலை வாக்கியங்கள் இரண்டும் பொதுவாக ஆராயப்படுகின்றன. ஆறாம் வேற்றுமையில் வரும் பெயர்த்தொடர்களும் ஆராயப் படுகின்றன. வேற்றுமை மயங்கியலில் வேற்றுமைத்தொடர் ஒன்றுடன் ஒன்று இணைந்து வருதல் (co-occurrence), ஒன்றின் இடத்தில் ஒன்று வருதல், அவற்றின் பல்வகைப்பொருள் வேறுபாடுகள் போன்றவை ஆராயப்படுகின்றன. வேற்றுமையியலில் எழுவாய் வேற்றுமை பேசப்படும்பொழுது பெயர்ப்பயனிலை வாக்கியத்தின் அமைப்பும் பொருளும்
பொருண்மை சுட்டல் வியங்கொளவருதல்
வினைநிலை உரைத்தல் வினாவிற்கேற்றல்
பண்புகொளவருதல் பெயர்கொளவருதல்
அன்றி அனைத்தும் பெயர்ப்பயனிலையே ( தொல். சொல். 67 )
என்ற நூற்பாவில் விளக்கப்படுகிறது. வினைப்பயனிலை வாக்கியத்தில் வரும் வேற்றுமைத் தொடர்களின் அமைப்பும் அவற்றின் வேறுபாடும் விளக்கப்படவில்லை. அதுவே மேல்காட்டிய "வினையே செய்வது (தொல். சொல். 112)" என்ற வேற்றுமை மயங்கியல் நூற்பாவில் விளக்கப்பட்டுவிடுகிறது. வினை அடிப்படையாய் அமையும் வாக்கியத்தில் அமையக்கூடிய அடிப்படைப் பொருண்மை நிலைகள் (Semantic primes) வினை, செய்வது அல்லது கருத்தா (Agent), செயப்படுபொருள் (Object or Patient), நிலன் (Place or Location), காலம் (Time), கருவி (Instrument), 'இன்னதற்கு’ (For the purpose of or Benefective), ‘இதுபயன் ஆக’ (Resultative) ஆகிய எட்டு. இது வினைப்பயனிலை வாக்கியத்தின் வினையையும் உட்கொண்ட பொருண்மை நிலையிலான முற்றமைப்பைக் காட்டுகிறது. வாக்கிய அமைப்பை மொழியியலார் ஆக்கக்கூறுநிலை (Constituency) அல்லது சார்புநிலை (Dependency) ஆகிய இருவகைகளில் ஒன்றால் விளக்குவர். ஆக்கக்கூறு நிலையில் வாக்கியம் (S) அதன் பகுதிகளாகப் (Constituent) பிரிபடும்.
S > NP + VP
வாக்கியம் > பெயர்த்தொடர் + வினைத் தொடர்
ஆனால் சார்புநிலை வாக்கிய அமைப்பில் ஒரு அடிப்படைப் பகுதியை மற்ற பகுதிகள் சார்ந்து அமையும். அம்முறையில் வினைப்பயனிலை வாக்கியங்கள் வினையிலிருந்தே பிரிபடுவனவாகக் காட்டப்படும்.
V > V (Verb வினை) + A (Agent கருத்தா) + P (Patient செயப்படுபொருள்) + I (Instrument, கருவி)
V V A P I ...
தொல்காப்பியர் இச்சார்பு நிலையைப் பின்பற்றியே வினையடிப்படை ("தொழில் முதனிலை") பொருள் நிலைகளில் வினையையும் ஒன்றாகக் காட்டுகிறார். வினையும் மற்ற கருத்தா, செயப்படுபொருள், நிலன், காலம், கருவி, இன்னதற்கு, இது பயன் ஆக என்ற எட்டுமே வாக்கியத்தின் பகுதிகள். இது தொல்காப்பிய நூற்பாவை அடிப்படையாகக் கொண்ட அகநோக்கில் அமையும் விளக்கம். வடமொழி மரபின் அடிப்படையில் காரகம் எனக் கொண்டால் வினையை வடமொழி (இலக்கண நூலார்) காரகமாகக் கொள்வதில்லை. ஆதலால் அதனையும் தொல்காப்பியர் உட்கொண்டதை உரையாசிரியரால் விளக்க இயலவில்லை. எனவே "வனைந்தான் என்பது வனைதலைச் செய்தான் எனச் செய்தற்கு வனைதல் செயப்படுபொருள் நீர்மைத்தாய்க் காரகமாம்" எனச் சேனாவரையர் விளக்கம் கூறுகிறார். செயப்படுபொருளை ஒரு 'காரகமாக'க் கருதிய பின் வினை என மீண்டும் கூறுவதற்கு இது விளக்கம் அளிக்கவில்லை. ஒரே பொருண்மைக்கு இரு காரகம் கூறுவது போல அமைகிறது. எனவே, இந்நூற்பா பேசுவது காரகம் என்ற விளக்கம் பொருத்தமானதல்ல என்பது புலனாகும். பாணினியின் காரகக் கொள்கையும் தொழில் முதல்நிலையும் முற்றிலும் வேறுபட்டவை என்பதை தொல்காப்பியப் பாணினீய ஒப்பாய்வுக் கட்டுரை விளக்கியுள்ளமை மேலே கூறப்பட்டது.
இவ்வாறே இதுவரை வந்துள்ள பொருளதிகார ஆய்வுகள் அனைத்தும் புறநோக்கில் அமைந்தவையாகவே உள்ளன. பொருளதிகாரத்தை எழுத்து சொல்லிலிருந்து பிளவுபட்ட பார்வையில் பிரித்தது மட்டுமன்றி அவ்வதிகாரச் செய்திகளையும் பகுதிபகுதியாக நோக்கி இலக்கியத்தின் பாடுபொருள், ரசக் கோட்பாடு, அணி, யாப்பு பேசுவதாக ஆராய்கின்றன. இதற்குக் காரணம் வடமொழி மரபு. மேனாட்டு மரபு இவற்றின் தாக்கமே. ஆனால் அகநோக்கு அணுகுமுறை தொல்காப்பியம் முழுவதிலும் பொருள் அதிகாரத்திலும் பேசப்படும் செய்திகளுக்கே முதன்மை அளித்து, பல்வேறு துறைகளுக்கு உரியனபோலப் புறநோக்கில் தோன்றும் செய்திகள் தொல்காப்பியரால் நூலின் பகுதியாகவும் ஓர் அதிகாரத்தின் பகுதியாகவும் கூறப்பட்டதற்குத் தக்க காரணங்கள் இருக்க வேண்டும் எனக் கொண்டு அவற்றை நூலிலிருந்தே கண்டறிய வேண்டும். இவ்வணுகுமுறைப்படி பொருளதிகாரம் பேசுவது மொழியின் பொருளமைப்பே என மேலே (3) கூறப்பட்டது அடுத்த பகுதியில் (5) விளக்கப்படும்.
5. தொல்காப்பிய அமைப்புத் தருக்க முறை
ஒரு நூல் கூறும் செய்திகளின் கொள்கைப் பின்னணியைப் புரிந்து கொள்ள அந்நூலின் அமைப்புத் தருக்க முறையும் (Organizational logic) கூர்ந்து ஆராயப்பட வேண்டும். முக்கியமாக ஒரு மொழி அமைப்பைப் பேசும் இலக்கண நூலின் அதிகாரப்பகுப்பு, இயல்பகுப்பு, இயல்களின் வரிசை அமைப்பு, அதிகாரங்கள் இயல்களுக்கு இடையே உள்ள பொருள் தொடர்பு ஆகியவை அவ்விலக்கண நூலின் மொழி பற்றிய கொள்கைப் பின்னணியை ஒட்டியும் இலக்கணம் கூறும் முறையின் (Technique of description) அடிப்படையிலும் அமைகின்றன. இன்றைய மொழியியல் வளர்ச்சியிலும் தொடக்ககால அமைப்பியல் மொழியியல் மொழி அமைப்பை ஒலியியல் (Phonetics), ஒலியனியல் (Phonemics), உருபொலியனியல் (Morphophonemics), உருபனியல் (Morphology) தொடரியல் (Syntax), பொருண்மையியல் (Semantics) என்ற பகுதிகளை உடையதாக ஆராய்ந்தது (Hockett. 1958). பின்னர் வந்த மாற்றிலக்கண மொழியியல் மொழியின் இலக்கணம் தொடரியற்பகுதி (Syntactic component) என்ற முக்கியப் பகுதியையும் அதன் விளக்கப் பகுதிகளான (Interpretive components) ஒலியனியல் பகுதி (Phonological component), பொருண்மையியல் பகுதி (Semantic component) ஆகியவற்றையும் கொண்டதாகக் காண்கிறது (Chomsky, 1965). இந்த முறையில் ஒலியியல், ஒலியனியல், உருபொலியனியல் செய்திகள் ஒலியனியலின் உள்ளும்; உருபனியல் செய்திகள், தொடரியலின் உள்ளும் அடங்கும். மாற்றிலக்கண முறையை உருவாக்கிய சாம்ஸ்கியே அவாய் நிலைக் கட்டுப்பாட்டுக் கொள்கை (Government and Binding), குறைநிலைத் திட்டம் (Minimalist programme) ஆகிய புதிய கொள்கைவரைவுகளை உருவாக்கியுள்ளார். கொள்கைப் பின்னணி மாறும்பொழுது மொழியின் இலக்கண அமைப்பும் மாறும். எனவே தொல்காப்பியத்தின் மொழியமைப்புக் கொள்கையையும், தொல்காப்பியம் பேசும் செய்திகளின் தன்மை, சிறப்பு ஆகியவற்றையும் புரிந்துகொள்ள, தொல்காப்பிய அதிகாரங்களின் இயலமைப்பின் அமைப்புத் தருக்கமுறையைப் புரிந்துகொள்ள வேண்டும். அவ்வடிப்படையிலேயே, அவ்வமைப்புத் தருக்க முறைக்கு மாறுகொள்ளாமலேயே, தொல்காப்பியம் பேசும் செய்திகள் விளக்கப்பட வேண்டும். அவ்வாறன்றிப் பிற மரபுகளின் அடிப்படையில் தொல்காப்பியச் செய்திகளுக்கு விளக்கம் அளிக்கும்பொழுது அது தொல்காப்பியத்தின் அமைப்புத் தருக்க முறையோடு மாறுபட்டு அமைவதைக் காணலாம். அது வலிந்து பொருள் கொள்வதாகவே அமையும்.
தொல்காப்பியத்தின் மூன்று அதிகாரங்களும் ஒவ்வொன்றும் ஒன்பது இயல்களை உடையனவாக வகுக்கப்பட்டுள. இவ்வதிகாரங்களின் இயல்பகுப்பு, வரிசை முறை, அவற்றில் கூறப்படும் செய்திகள் தொல்காப்பியத்தின் மொழிக் கொள்கைப் பின்னணி, அவர் இலக்கணம் கூறும் முறை, இவற்றின் அடிப்படையில் அமைந்துள்ளன. இவற்றுள் எழுத்ததிகார அமைப்புத் தருக்க முறை (பாலசுப்பிரமணியன், 1987) நன்கு விளக்கப்பட்டுள்ளது. எழுத்ததிகாரத்தில் முதல் இயலான நூன்மரபின் இடத்தையும் சிறப்பையும் அது மூன்று அதிகாரங்களாய் அமைந்த தொல்காப்பியம் முழுமைக்கும் பொதுவானது என்பதும் (பாலசுப்பிரமணியன், 1984) தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. சொல்லதிகார இயல்கள் பகுப்பும் வரிசை முறையும் மற்ற பிற்கால இலக்கண நூல்களிலிருந்து வேறுபட்டிருப்பது தொல்காப்பியரின் இலக்கணக் கொள்கைப் பின்னணியை அடிப்படையாகக் கொண்டது. சொல்லதிகாரம் எனப் பெயரிட்டிருப்பினும் நன்னூலார்போலச் சொல்லின் பொது இலக்கணம், சொல் வகைப்பாடு, சொல் வகைகளின் சிறப்பிலக்கணம் என இயல் பகுக்காது கிளவியாக்கத்தில் வாக்கிய அமைப்பிற்கு உரிய பல செய்திகளைப் பேசி, பெயரிலக்கணம் பேசுமுன் பெயர் ஏற்கும் வேற்றுமை இலக்கணத்தை மூன்று இயல்களில் பேசி, பின்னர் பெயரியல், வினையியல், இடையியல், உரியியல் செய்திகளைப் பேசுவதும் எஞ்சிய பொதுவிலக்கணம் எச்சவியலில் பேசுவதும் உட்கொள்ளத்தக்கது. சொல்லதிகாரம் தனிச்சொல் இலக்கணம் பேசாது வாக்கிய அமைப்பைப் பேசும் தொடரியலுக்கே சிறப்பிடம் கொடுக்கும் இலக்கணம். தொடர் அமைப்பையும் எழுவாய் (Subject), பயனிலை (Predicate) என்ற அடிப்படையில் மேனாட்டினர்போலப் பிரித்து ஆராயாமல் வாக்கியத்தில் அமையும் வேற்றுமைகளின் அடிப்படையில் ஆராய்கிறது. எனவேதான் வேற்றுமைக்குச் சிறப்பிடம் கொடுத்து மூன்று இயல்களில் பேசுகிறது. வேற்றுமை அடிப்படையில் வாக்கிய அமைப்பை அதன் புறநிலை, பொருண்மை நிலைகளில் ஆராயும் முறையைப் பாலசுப்பிரமணியன் (1978, 2001) கட்டுரைகளில் விளக்கியுள்ளமையைமுன்பகுதியில் கண்டோம். பின் வினையியலும் பெயரெச்ச இலக்கணம் பேசும்பொழுது தொழில் முதனிலைகள் எனும் பொருண்மை நிலைகள் அடைப்படையில் விளக்குகிறார் (தொல். சொல். 234). வேற்றுமை இலக்கணம் அவர் மொழிக்கொள்கையின் அடிப்படை என்பது எழுத்ததிகாரத்தில் புணர்ச்சியை வேற்றுமை குறித்த புணர் மொழிநிலை, வேற்றுமையல்வழிப் புணர்மொழி நிலை (தொல். எழுத்து. 113) எனப் பிரித்து விளக்குவதாலும் அறியலாம். எனவே தொல்காப்பியத்தைத் தொடரியல் பேசும் இலக்கணமாக அதிலும் வேற்றுமை இலக்கணமாக (Case grammar) காணாமல் சொல்வகை அடிப்படை இலக்கணமாக வடமொழி மரபைப் பின்பற்றி உரையாசிரியருள் தெய்வச்சிலையார் தவிர மற்றவர் விளக்குவது அவர் நூலின் அமைப்புத் தருக்கமுறையோடு மாறுபடுகிறது.
பொருளதிகாரத்தின் முன்பகுதி இலக்கியத்தின் பாடுபொருள், ரசக் கோட்பாடு, அணியிலக்கணம், யாப்பிலக்கணம் எனப் பல்வகைப்பட்ட செய்திகளைக் கூறும் பகுதி; அது பேசும் செய்திகள் இலக்கியம் பற்றிய செய்திகளே; மொழி அமைப்புப்பற்றியவை அல்ல என்று நம் நாட்டு, மேனாட்டு அறிஞர்கள் கூறியுள்ளதைக் கண்டோம். பகுதி (1) இல் அறிவியல், வரலாற்றுக் கண்ணோட்டத்தில் தொல்காப்பியச் செய்தி அனைத்தும் மொழியமைப்புப்பற்றியனவாகவே ஆராயப்பட வேண்டும்; அண்மைக்காலத்திய எனது ஆய்வுகளின் அடிப்படையில் (பாலசுப்பிரமணியன், 1998, 1999, 2000, 2001) பொருளதிகாரம் பேசுவது பழந்தமிழ் மொழியின் பொருண்மை அமைப்பே; மெய்ப்பாட்டியல், உவமவியல், மரபியல் செய்திகளும் பொருண்மை அமைப்பிற்கு உரியனவே; செய்யுளில் மட்டுமே இலக்கிய அமைப்பைப் பேசுவது எனக் கூறினேன். பொருளதிகார இயல்கள் பேசும் செய்திகளின் அமைப்புத் தருக்கமுறை அடிப்படையில் பார்க்கையில் அது பல்வேறு செய்திகளைப் பேசுவதாகக் கொள்வது பொருத்தமற்றது; பொருண்மை அமைப்பின் பல்வகைக் கூறுகளையே பொருளதிகாரம் பேசுகிறது என்பது புலனாகும். இங்கே பேசுப்படுவது சொற்பொருண்மை அல்ல; அது உரியியலில் பேசப்பட்டுவிடுகிறது. உலகப் பொருண்மை மொழிக்கு மொழி மாறுபட்டு அமையும் மொழிப் பொருண்மையின் முற்றமைப்பே. என் முந்தைய ஆய்வில் (பாலசுப்பிரமணியன், 1998, 1999, 2000, 2001) கூறப்பட்ட கருத்துக்கள் இங்கே சுருக்கமாக விளக்கப்படும். பொருளதிகாரம் இலக்கியக் கோட்பாடு பேசும் நூலாயின் அது இலக்கியத்தின் அமைப்பு, இலக்கிய வகைகள், இலக்கியத்தின் வடிவக் கூறுகள், இலக்கிய உத்திகள், இலக்கியத்தின் பாடுபொருள் (Theme) என்ற வரிசையில் செய்திகளைக் கூற வேண்டும். அகத்திணையியல், புறத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல் என்ற ஐந்து இயல்களில் பாடுபொருள்பற்றிப் பேசி, மெய்ப்பாட்டியலில் ரசக்கோட்பாடுடன் ஒப்பிடத்தக்க எண்வகை மெய்ப்பாடுகளையும் வேறு பல செய்திகளையும் கூறி, பின் அணியியல் எனத்தக்க உவமையியல் பேசி, அதை அடுத்துச் செய்யுளியலில் செய்யுள் அல்லது ஆக்கப்பட்ட மொழிவகையின் (Composition) உறுப்புகளாக, வடிவமைப்பு, பொருளமைப்புக் கூறுகள், செய்யுள் வகைகள் அனைத்தையும் பேசி, பின் இவற்றோடு எவ்வகையிலும் தொடர்பற்றது போலக் காணப்படும் மரபியல் பேசுவது இலக்கியவியல் ஆய்வுக்கு எவ்வகையிலும் பொருத்தமுடையதாகத் தோன்றவில்லை. பொருளதிகாரத்தை இலக்கியவியல் பேசுவது எனக் கூறும் ஆய்வு எவ்வகையிலும் பொருள் தொடர்பு அற்ற ஒரு முறையைப் பின்பற்றித் தொல்காப்பியர் நூல் செய்தார் என்று கொள்ளவைக்கிறது. ஆனால் பொருளதிகாரம் ஆய்வது பொருண்மையியல் செய்திகளே எனக்கொண்டு நோக்கும்போது பொருளதிகார இயலமைப்பு பொருத்தம் உடையதாகவும் ஒன்றுக்கொன்று தொடர்பு உடையதாகவும் அமைகிறது. அது பின்வருமாறு அமையும்.
அகத்திணையியல் முதல் பொருளியல் வரையிலான ஐந்து இயல்கள் வழக்கிற்கும் செய்யுளுக்கும் உரிய கருத்துப் பொருண்மை ஒழுங்கமைவை விளக்குகின்றன. இவற்றுள்ளும் அகத்திணையியல், பொருளியல் ஒருவகை அமைப்பு முறையையும் களவியல், கற்பியல் இன்னொரு வகை அமைப்பையும் உடையன. அகத்திணையியல் கூறும் அகப்பொருட் கொள்கையைப் பகுப்பாய்வு செய்து, அது பாடலுள் பயின்று வழங்கும் முறையையும் உட்கொண்டு திணை, முதல், கரு, உரி போன்ற அகப்பொருண்மையின் கருத்து வகைகள் (Conceptual categories), தலைவன், தலைவி, தோழி, நற்றாய், கண்டோர் போன்ற பொருண்மை நிகழ்த்துவதற்குரிய மாந்தர், அவர்க்குரிய மொழி நிகழ்வுச் சூழல் அல்லது சுற்றுச்சூழல் வகைகள், அவர்கள் செயல்பாட்டில் உள்ள வரையறை அல்லது கட்டுப்பாடுகள் (எ◌டு: "முந்நீர் வழக்கம் மகடூஉவோடு இல்லை" தொல். பொருள். 37), இப்பொருண்மை வகைப்பாட்டை உணர்வதற்குத் துணைபுரியும் மொழிக் கருவியாகிய உவமை, அதன் வகைகள், செய்யுளில் எவ்வகைகளில் இப்பொருண்மை சிறப்பாகப் பேசப்படுகிறது முதலான செய்திகளைப் பேசுகிறது. இவையனைத்தும் அகப்பொருள் கொள்கையாக்கத்திற்கு (Theorization) உரியவை. பொருளியலும் இவ்வாறே களவியல், கற்பியலையும் உட்கொண்டு கொள்கையாக்கம், கொள்கை வரையறைக்கூறுகளைச் சொல்கிறது.
ஆனால், களவியல், கற்பியல் வேறுபட்ட அமைப்பைக் கொண்டவை. தலைவன், தலைவி இருவர் அக வாழ்வில் களவு, கற்பு ஆகிய இரு பகுதிகளின் நிகழ்வுகள், அவற்றின் வரைவிலக்கணம், நிகழ்வரிசை (Sequence), நிகழ் சூழல் (Conditions), கூற்று நிகழ்சூழல், நிகழ்காலம் (இரவுக்குறி, பகற்குறி), நிகழ்இடம் (மனையகம், சிறைப்புறம்) மற்ற இவற்றுடன் தொடர்புடைய செய்திகள் கருத்துக் கூறுகளாக (Conceptual units) வரிசைப்படுத்திக் கூறப்படுகின்றன. இவ்விரு இயல்களில் பகுப்பாய்வோ கொள்கை ஆக்கமோ இல்லை. ஆனால் அகத்திணை இயலில் பகுப்பாய்வு செய்து வகுக்கப்பட்ட கருத்து வகைகளான திணை, முதல், கரு, உரி ஆகியவை இவ்விரு இயல் செய்திகளுக்கும் உரியவை.
புறத்திணையியல் வேறொரு வகை அமைப்பினை உடையது. பகுப்பாய்வு செய்ததின் அடிப்படையில் திணை வகுக்கப்பட்டு, அவற்றின் வரைவிலக்கணம் முதலில் பேசப்பட்டு அகத்திணைகளோடு கருத்து நிலையில் ஒப்பிடப்பட்டு, ஒவ்வொரு திணைக்குரிய நிகழ்வு வரிசைகளாகிய கருத்துக் கூறுகள் துறைகளாகப் பேசப்படுகின்றன. பல்வகைப் பொருட்கூறுகள் வாகையிலும், பாடாண் திணையிலும் பேசப்படுவன தமிழ்ப் புறப்பொருண்மையின் கருத்தாக்க முறையைக் காட்டுகின்றன.
மெய்ப்பாட்டியல் பேசுவது மேல் ஐந்து இயல்களில் ஆராயப்பட்ட அகப், புறப் பொருண்மையின் நிகழ்வுக் கூறுகளுக்குத் (Events) தொடர்புடைய மன, உடலியல் கூறுகள் (Psycho◌physical aspects). இவை செய்யுள் அல்லது இலக்கியத்தின் ரசக் கோட்பாடுகள் (Poetic sentiments) மட்டுமல்ல என்பது, தொல்காப்பியர் நகை முதலாகிய எட்டுவகை மெய்ப்பாடுகளை 11 நூற்பாக்களில் 22 வரிகளில் பேசி, பின்னர், அவற்றிலிருந்து வேறுபட்ட "உடைமை, இன்புறல்" போன்ற பலவற்றை 10 நூற்பாக்களில் 68 வரிகளில் ஆராய்வதிலிருந்து புலனாகும். உடைமை, இன்புறல், நடுநிலை, அருளல் போன்ற நுண்ணுணர்வுகளும், புகுமுகம் புரிதல், பொறிநுதல் வியர்த்தல் போன்ற அகப் பொருண்மையைக் காட்டும் செய்கைகளும் நிகழ்வுகளும் இன்பத்தை வெறுத்தல், துன்பத்துப்புலம்பல் போன்ற மனநிலைகளும் இவற்றுள் பேசப்படுகின்றன. நகை முதலிய எட்டும் பிறவும் அகப், புறப் பொருண்மையின் உணர்ச்சி, செய்கைக் கூறுகளே தவிர இலக்கியத்திற்கு உரியவை மாத்திரம் அல்ல. இத்தொடர்பை உரையாசிரியர் உணர்ந்திருந்தனர்.
"மேலை ஓத்துக்களுள் கூறப்படும் ஒழுகலாற்றுக்கும் "காட்டலாகாப் பொருள்" (தொல். பொருள். 243) என்பனவற்றிற்கும் எல்லாம் பொதுவாகிய மனக்குறிப்பு இவையாதலின் இவற்றை வேறுகொண்டு ஓரினமாக்கி மெய்ப்பாட்டியலென வேறொர் ஓத்தாக வைத்தமையானே எல்லாவற்றோடும் இயைபுடைத்து" என்று பேராசிரியர் கூறுவதன் மூலம் இதனை அறியலாம்.
அடுத்து, உவமவியல் ஆராய்வது தொல்காப்பியர் கண்ணோட்டத்தில் இலக்கியத்திற்கு அழகு சேர்க்கும் அணி அல்ல; மொழிப் பொருண்மையை உணர்த்துவதற்குப் பயன்படும் ஒரு கருவியே என்பது தொல்காப்பியர் உவமையை முதற்கண் அகத்திணையியலிலேயே அறிமுகப்படுத்தி, வகை கூறி அது வருமாற்றை விளக்குவதிலிருந்தே அறியலாம்.
உள்ளுறை உவமை ஏனை உவமம் எனத்
தள்ளாதாகும் திணை உணர்வகையே - தொல். பொருள். 49
உள்ளுறை தெய்வம் ஒழிந்ததை நிலம் எனக்
கொள்ளும் என்ப குறி அறிந்தோரே - தொல். பொருள். 50
உள்ளுறுத்து இதனோடு ஒத்துப்பொருள் முடிகென
உள்ளுறுத் துரைப்பதே உள்ளுறை உவமம் - தொல். பொருள். 51
ஏனை உவமம் தான் உணர்வகைத்தே - தொல். பொருள். 52
என்பன உவமம் பொருண்மை உணர்த்தும் கருவியே என்பதைப் புலப்படுத்தும். பொருளியலிலும் மூன்று நூற்பாக்களில் (238 - 240) உள்ளுறைபற்றிப் பேசுகிறார். மேலும் உவமவியலிலும் உவமத்தின் இயல்பு, உவமை உருபுகள் ஆகியவற்றைப் (தொல். பொருள். 272 ◌296) பேசிய பின் உவமத்திற்குப் பொருண்மையோடு உள்ள தொடர்பைக் கூறுகின்றார்.
உவமப்பொருளின் உற்றதுணரும்
தெளி மருங்குளவே திறத்தியலான - தொல். பொருள். 291
உரையாசிரியர் இதனை உணர்ந்திருந்தனர் என்பது பேராசிரியர் "மற்றிரு திணைப்பொருளும் உவமம் பற்றி வழக்கினுள் அறியப் படுதலானும், உவமம் பற்றியும் பொருள் கூறுகின்றான் என்பது" (தொல். பொருள். பேரா. ப. 57) எனக் கூறுவதனால் புலனாகும். இதுவன்றித் தொடர்ந்து வரும் நூற்பாக்களும் (தொல். பொருள். 297 ◌ 302) உவமை, யார் யார் கூற்றுள் வரும், அதன்கண் எவ்வகைப் பொருள் தோன்றும் என்றெல்லாம் கூறுவது, உவமை, பொருளை விளக்குவதற்கு உரிய கருவியே என்பதைத் தெளிவாகக் காட்டும். எனவே, உவமவியலின் இடம் மொழிப்பொருண்மைக்கு உரியதே தவிர இலக்கியத்திற்கு அணி செய்வதல்ல என்பது தெளிவாகும். செய்யுளில் முற்றிலும் இலக்கியக் கோட்பாடுபற்றிப் பேசும் பகுதி. செய்யுள் என்ற சொல் இயல்பான வழக்காகிய பேச்சில் நின்றும் வேறுபட்டு எண்ணி யாக்கப்படும் அனைத்து மொழி வடிவங்களையும் குறிக்கிறது (தொல். பொருள். 386). இவற்றுள் நூல் தவிர மற்றவற்றை இலக்கிய வடிவங்களாகக் கொள்ளலாம். ஆகையால், இவ்வியல் இலக்கியக் கோட்பாடு பேசும் பகுதி எனக் கொள்வது பொருத்தமாகும். மீனாட்சிசுந்தரன் (1969), பெரியகருப்பன் (1975, 1979), பாலகிருட்டினன் (1998) ஆகியோர் இதனை நன்குணர்ந்து விளக்கியுள்ளனர். இவ்வியலில் தொல்காப்பியர் கூறும் செய்திகளைப் புரிந்துகொண்டு பொருளதிகாரத்தில் இதன் இடத்தைப் புரிந்துகொள்வது மற்ற இயல்கள் பேசுவது மொழிப்பொருண்மையே என்பதைப் புரிந்துகொள்ளத் துணை புரியும்.
தொல்காப்பியர் செய்யுளின் உறுப்புகளாக 34-ஐக் கூறுகின்றார். இவை பிற்கால யாப்பருங்கலம், யாப்பருங்கலக்காரிகை போன்ற நூல்கள் கூறும் மாத்திரை, எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை போன்ற செய்யுள் வடிவம் பேசும் உறுப்புகளும் திணை, கைகோள், கூற்றுவகை, கேட்போர், களன், காலம், பயன், மெய்ப்பாடு, எச்சம், முன்னம், பொருள் போன்ற பொருள் பற்றிய உறுப்புகளும் வண்ணம், வனப்பு, அம்மை, அழகு, தொன்மை, தோல் போன்ற வடிவம், பொருள் என்ற இரண்டையும் பற்றிய உறுப்புகளும் ஆகும். இவற்றுள் திணை, கைகோள், கூற்றுவகை, கேட்போர், மெய்ப்பாடு ஆகியவை முன் அகத்திணையியல் முதலான ஆறு இயல்களில் விரிவாகப் பேசப்பட்டவை. மீண்டும் இங்குச் செய்யுள் உறுப்புகளாகக் கூறப்பட்டு சுருக்கமாக இலக்கணம் கூறப்படுவது உட்கொள்ளத்தக்கது. முன் அவ்வியல்களில் பேசப்பட்ட நோக்கம் மொழிப்பொருண்மை விளக்குவது. இங்கே பேசப்படுவது செய்யுள் என்னும் இலக்கியத்தின் முற்றமைப்பின் பகுதியாக, அதன் பாடுபொருளாக. எனவே, முந்தைய ஐந்தியல்கள் பேசியது இலக்கியப் பாடுபொருள் அல்ல; வழக்கும் செய்யுளுமாய் அமைந்த மொழியின் பொருண்மையே என்பது வலியுறுகிறது.
அடுத்து, இவை தவிர பொருள் என்ற ஒன்றைச் செய்யுள் உறுப்பாகக் கூறுவதும் அதற்குக் கூறும் இலக்கணமும் கூர்ந்து ஆராய்தற்குரியன.
இன்பமும் இடும்பையும் புணர்வும் பிரிவும்
ஒழுக்கமும் என்றிவை இழுக்கு நெறியின்றி
இதுவாகு இத்திணைக்கு உரிப்பொருள் என்னாது
பொதுவாய் நிற்றல் பொருள்வகை என்ப - தொல். பொருள். 509
முதல் ஐந்து இயல்களில் வழக்கிற்கும், செய்யுளுக்கும் உரிய பொருண்மை அமைப்பை திணை, முதல், கரு, உரி, களவு, கற்பு என்பனவாக வகுத்துக் கூறினார். ஆனால் இலக்கியம் செய்வோர் இவ்வமைப்புக் கட்டுப்பாட்டை மீறியும் அவற்றினின்று வேறுபட்டும் செய்யுள் செய்வார் ஆதலின் அவ்வமைப்பு முறையிலடங்காத பொதுவான பொருளை இங்கே இலக்கியம் அல்லது செய்யுளின் சிறப்பியல்பாய் விளக்குகிறார். குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல் போன்ற திணைகளையும் அவற்றிற்குரிய உரிப்பொருளாகப் புணர்தல், பிரிதல், இருத்தல், ஊடல், இரங்கல் போன்றவற்றையும் கூறியபின் களவு, கற்பு எனக் கைகோள்களையும் வகுத்த தொல்காப்பியர் அக்கலைச்சொற்களைப் பயன்படுத்தாது, இன்பம், இடும்பை, புணர்வு, பிரிவு, ஒழுக்கம் எனப் பொதுச் சொற்களைப் பயன்படுத்துவதும் மீண்டும் பொதுவாய் நிற்றல் என்று கூறுவதும் அவ்வைந்து இயல்களில் வகுத்த பொருண்மை அமைப்பை வேறு கண்ணோட்டத்தில் பார்க்கிறார் என்பதையே காட்டுகிறது. இது செய்யுள் அல்லது இலக்கியக் கண்ணோட்டம். இலக்கிய ஆசிரியனின் மொழி மரபை மீறும் உரிமையைக் காட்டும் கண்ணோட்டம். நெடுநல்வாடை, பட்டினப் பாலை, போன்ற பத்துப்பாட்டுப் பாடல்கள் அகப் பொருண்மையையும், புறப் பொருண்மையையும் கலந்து செய்யுள் இயற்றுவதற்கு, அமைதி கூறும் இலக்கியக் கண்ணோட்டம். இவை அனைத்தும் பொருளதிகாரத்தில் இலக்கியக் கோட்பாடு பற்றிப் பேசுவது செய்யுளியல் மட்டுமே; மற்ற இயல்கள் மொழிப்பொருண்மை அமைப்பைப் பேசுவனவே என்பதை வலியுறுத்துகின்றன.
அடுத்து, மரபியல் பேசும் செய்திகளின் இயல்பு ஆராயப்படும். மொழியமைப்பில் அடுக்கு நிலை (Paradigmatic) உறவு, தொடர் நிலை (Syntagmatic) உறவு என்ற இருவகை, மொழிக் கூறுகளுக்கிடையே செயல்பட்டு மொழியமைப்பை விளங்கிக்கொள்ள உதவுகின்றன. அடுக்கு நிலை ஒரே சூழலில் வரும் பல்வகை அலகு (unit) களிடையே வரும் வேற்றுநிலை (contrastive) உறவு. இது வடிவமைப்பில் ஒரு மொழியின் ஒலியன்கள், உருபன்கள், சொல்வகைகள் ஆகியவற்றைக் கண்டறிய உதவும். இவ்வலகுகள் ஒன்றையடுத்து ஒன்று வருவதில் உள்ள கட்டுப்பாடுகள் தொடர்நிலை உறவு. இவ்வுறவுகள் பொருளமைப்பிலும் வரும்.
இது ஓர் உயரமான மரம்
என்ற வாக்கியத்தில் உயரமான என்ற சொல்லின் இடத்தில் "குட்டையான" என்ற எதிர்ச்சொல் அடுக்குநிலையில் வேறுபடும். நல்ல - கெட்ட, உயர்ந்த - தாழ்ந்த போன்ற எதிர்ச்சொற்கள் இவ்வாறு வேறுபடுபவை.
ஞாயிறு காலையில் கிழக்கே தோன்றும்
என்ற வாக்கியத்தில் உள்ள நான்கு சொற்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்நிலையில் பொருள் உறவு உடையவை.
ஞாயிறு மாலையில் மேற்கே மறையும்
என்ற வாக்கியத்துடன் ஒப்பிட்டால் இத்தொடர் உறவின் சிறப்பு புலப்படும். இவ்வமைப்பை மாற்றினால் பிழையான வாக்கியம் தோன்றும். ஞாயிறு காலையில் மேற்கே தோன்றும் இவ்வாக்கியம் வடிவமைப்பில் இலக்கணப் பிழையற்ற வாக்கியம். ஆனால் பொருளமைப்பில் தொடர் உறவில் பிழையானது. இவை வாக்கியத்தில் உலகப் பொருண்மையின் மாறாத இயல்பின் அடிப்படையில் பயன்படுத்தப்படுபவை. ஆனால் சில சொற்களின் தொடர் உறவுகள் மரபின் அடிப்படையில் வருபவை.
ஆவின் கன்று குதிரைக் குட்டி
கோழிக் குஞ்சு தென்னம் பிள்ளை
போன்ற தொடர்களில் இளம்பருவப் பெயர்களை மரபின் மூலமே அறிய வேண்டும். மாறிவழங்கினால் பொருள் நிலையில் பிழையான வாக்கியங்கள் வரும். இத்தகு மரபு அடிப்படையிலான சொற்களின் தொடர் நிலைக் கட்டுப்பாட்டையே, இளமைப் பெயர்கள், ஆண்பாற் பெயர்கள், பெண்பாற் பெயர்கள், ஆகியவற்றைப் பேசும்போது மரபியலில் கூறுகிறார். இவை போன்ற சொற்களிடையே உள்ள மரபு பற்றிய பொருண்மை உறவுகளையே மரபியல் ஆராய்கிறது. மொழிப்பொருண்மை இயலில் இவை சொற்சேர்க்கைக் கட்டுப்பாடுகள் (Collocational restrictions) என வழங்கப்படும். எனவே, மரபியல் பேசுவதும் பொருண்மை அமைப்புப் பற்றிய செய்தியே. இதுவரை ஆராய்ந்தவற்றின் அடிப்படையில் பொருளதிகாரத்தில் செய்யுளியல் தவிர்த்த மற்ற இயல்களில் பேசப்படுபவை மொழிப் பொருண்மை அமைப்பிற்குரிய செய்திகளே; அவை வழக்கிற்கும் செய்யுளுக்கும் உரியவை. செய்யுளியல் மட்டுமே இலக்கியக் கோட்பாடுகளை ஆராய்கிறது. இவ்விளக்கமே பொருளதிகார இயல்களின் அமைப்புத் தருக்கமுறையோடு பொருந்திவருகிறது என்பது புலனாகும்.
6. தொல்காப்பியத் தரவு
அணுகுமுறையில் அடுத்ததாக நோக்க வேண்டியது தொல்காப்பியம் என்னும் இலக்கண நூலுக்கு அடிப்படையாகத் தொல்காப்பியர் கொண்ட தரவுகள் (data) யாவை? அத்தரவுகளின் இயல்பு என்ன? என்று அறிந்து கொள்வதும் அந்த அடிப்படையில் நூலின் செய்திகளை அணுகுவதும்.
பண்பாட்டு வளர்ச்சியுற்ற மக்களால் பேசப்படும் மொழியின் தரவுகள் எப்பொழுதும் பரந்துபட்டவையாகும். வழக்கு அல்லது பேச்சின் வட்டார, சமுதாய வேறுபாடுகளும் எழுத்து மொழியின் பல்துறை நூல்களும் மொழித்தரவுகளே. வேறுபாடு (Variation) இத்தரவின் அடிப்படை இயல்பு. ஆனால் இலக்கண நூலாசிரியர் வேறுபாட்டை இயல்பாகக் கொண்ட மொழி முழுவதையுமோ, தான் சிறப்புடையதாகக் கருதும் ஒருவகையையோ, தகைவழக்கு (Standard usage) என்று கருதப்படுவதையோ, இலக்கியமொழியை மட்டுமோ தரவாகக் கொண்டு இலக்கணம் செய்யலாம். ஆங்கில மொழியை ஆய்வோர் இங்கிலாந்து அரசன் அல்லது அரசி பேசும் மொழி (King’s/Queen’s English) அல்லது இலண்டன் மாநகரில் வழங்கும் மொழியையே தகைவழக்காகக் கொண்டு ஆய்வர். ஆனால் சமுதாய மொழியியல் (Socio◌linguistics) அடிப்படையில் ஆராய்வோர், மொழி வேறுபாட்டிற்குச் சிறப்பிடம் கொடுத்து ஆய்வர். இக் கண்ணோட்டத்தில் தொல்காப்பியத்திற்குத் தரவாய் அமைந்தது எது? பாயிரம் விளக்குவதன் அடிப்படையிலும், தொல்காப்பியர் மூன்று அதிகாரங்களிலும் பேசும் செய்திகளின் அடிப்படையிலும் வழக்கு அல்லது பேச்சும் (speech) செய்யுளுமே. பழந்தமிழ் வழக்கு அக்காலத்துத் தகை வழக்காகக் கருதப்பட்ட செந்தமிழ் நிலத்தும் செந்தமிழ் சார்ந்த பன்னிரு நிலத்தும் பேசப்பட்டது. பரந்துபட்ட உறழ்ச்சி வடிவங்களைக் கொண்டது. கல்தீது, கற்றீது, கஃறீது (தொல். எழுத்து. 369, 370) பீர்ங்கோடு, பீரங்கோடு (தொல். எழுத்து. 364, 366), தேன்குடம், தேற்குடம், தேக்குடம் (தொல். எழுத்து. 341) போன்ற எண்ணற்ற உறழ்ச்சிகள் இதனைக் காட்டும். இத்துடன் பழந்தமிழ்ச் செய்யுளும் அவர்க்குத் தரவாய் அமைகிறது. தொல்காப்பியரால் ஆராயப்படும் பழந்தமிழ்ச் 'செய்யுள்' பிற்கால யாப்பருங்கலக்காரிகை காட்டும் மரபு போல் எழுத்து, சீர், அடி, தளை, தொடை வரையறை கொண்ட நால்வகைப் பா அல்லது பாட்டை மட்டும் குறிப்பது அல்ல. அவற்றுடன் உரை, நூல், வாய்மொழி, பிசி, அங்கதம், முதுசொல் ஆகியவற்றையும் (தொல். பொருள். 384) உள்ளடக்கியது. இச்செய்யுள் ஆக்கத்திற்குப் பயன்படும் சொற்கள் செந்தமிழ் நிலத்து வழக்குச் சொற்களும் (தொல். சொல். 398), சொற்பன்மையும்பொருட்பன்மையும் கொண்ட திரிசொற்களும் (தொல். சொல். 398), செந்தமிழ் நிலம் சேர்ந்த பன்னிரு நிலத்தும் பேசப்பட்ட வட்டார வழக்குச் சொற்களாம். திசைச் சொற்களும் (dialectal words) (தொல். சொல். 400), இவையன்றி வட சொற்களும் (தொல். சொல். 401) ஆகும். எனவே, தொல்காப்பியத்திற்குத் தரவாய் அமைந்தது வேறுபாடற்ற ஒற்றுமை (uniformity) உடைய மொழி அல்ல. பன்முக வேறுபாடுகளைக் கொண்ட வழக்கும் (பேச்சும்) அதன் அடிப்படையில் உருவான ("செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணி" (தொல். சொல். 398) "செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும் தங்குறிப்பன" (தொல். சொல். 400) செய்யுளும் "இயற்சொல், திரிசொல், திசைச்சொல் வடசொல்லென்று அனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே" (தொல். சொல். 397) ஆகிய இருவகைப் பயன்பாட்டுக் களங்களில் தொழிற்பட்ட தமிழ்மொழியே. இப்பன்முக மொழியின் எழுத்தமைதி, சொல்லமைதி, பொருளமைதியே தொல்காப்பிய நூற்பொருள். இம்மூவகை அமைப்புகளும் வழக்கும் செய்யுளுமாகிய அப்பன்முகப் பயன்பாட்டுக் களத்தின் பொதுமையையும் வேறுபாட்டையும் காட்டி நிற்கின்றன. ஒருவகையில் வழக்கிற்கு உரிய கட்டமைப்பு செய்யுளுக்கும் அடிப்படையாய் அமைகிறது. எனினும் செய்யுள் தனக்கென வடிவக் கூறுகள், பொருட்கூறுகள் வடிவும் பொருளும் கலந்த கூறுகளைக் கொண்டு தனித்து நிற்கின்றது. எனவே, இவ்வேறுபாடு உடைய தரவின் தன்மை தொல்காப்பிய, இலக்கணத்தின் அமைப்பு, செய்திகள் முதலியவற்றைப் பாதிப்பது இயல்பு என உணர்ந்து நூலை அணுகிப் புரிந்துகொள்ள வேண்டும். இதன் காரணமாகவே மூன்று அதிகாரங்களிலும் வழக்கிற்கும் செய்யுளுக்கும் உரிய பொதுவான இலக்கணத்தைக் கூறி, வழக்கிற்கே உரியனவற்றையும் செய்யுளுக்கே உரியனவற்றையும் தனியாகப் பேசுகிறார் (தொல். எழுத்து. 51, 214, 238, 259, 289, 317, 357; தொல். சொல். 18, 27, 39, 50, 51, 108, 195, 211, 246; தொல். பொருள். 213, 214, 292, 613, 638). மேலும் பொருள் அமைப்பைப் பேசும் பொருளதிகாரத்தில் செய்யுள் இலக்கணம் அல்லது இலக்கிய இலக்கணம் ஓர் இயலில் (செய்யுளியல்) பேசப்படுவது செய்யுள் அல்லது இலக்கிய மொழியும் தொல்காப்பியத்திற்குத் தரவாய் அமைவதனாலேயே. செய்யுள் என்ற இன்னொரு மொழி ஊடகத்தின் (medium) சிறப்பு அமைப்புக்கூறுகள் மொழியின் எழுத்து, சொல், பொருள் அமைப்புப் பேசப்பட்ட பின் இறுதியாகப் பொருளதிகாரத்தின்கண் பேசப்படுகின்றன.
துணைநூல்கள்
1.
அகத்தியலிங்கம், ச., க. பாலசுப்பிரமணியன், 1974. "தமிழிலக்கண மரபு" - ச. அகத்தியலிங்கம் க. பாலசுப்பிரமணியன் (பதிப்பு), இலக்கண ஆய்வுக் கட்டுரைகள் - 1, (ப. X-Liii) அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர்.
2.
அடிகளாசிரியன், 1969. தொல்காப்பியம், எழுத்ததிகாரம் இளம்பூரணர் உரை, கரந்தைப்புலவர் கல்லூரி, தஞ்சாவூர்.
3.
ஆபிரகாம் அருளப்பன், வ. அய். சுப்பிரமணியம் (பதிப்பு) 1963, தொல்காப்பியம், சொல்லதிகாரம், உரைக் கோவை, அருள் அச்சகம், திருநெல்வேலி.
4.
கிருட்டினமூர்த்தி, கோ., 1990. தொல்காப்பிய ஆய்வின் வரலாறு, சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.
5.
குமாரசாமிராஜா, 1974. "குற்றுகரமா, முற்றுகரமா?" ச. அகத்தியலிங்கம், க. பாலசுப்பிரமணியன் (பதிப்பு), இலக்கண ஆய்வுக் கட்டுரைகள் - 1 (ப. 15-28) அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர்.
6.
கோவிந்தசாமிப்பிள்ளை, இராம., 1967. தொல்காப்பியம், எழுத்ததிகாரம், நச்சினார்க்கினியார் உரை, சரஸ்வதி மகால், தஞ்சை.
7.
சிதம்பரநாத செட்டியார், 1992. English - Tamil Dictionary, University of Madras, Chennai.
8.
சுவலபில், கமில் (Kamil Zvelebil), Comparative Dravidian Phonology, Mouton, The Hague.
9.
சுவலபில், கமில், 1974. Tamil Literature, Otto Harassowitz, Wise baden.
10.
செல்வநாயகம், பி., 1969. “Some problems in the study of Tolkappiyam in relation to Sangam poetry” in the Proceedings of the First International Conference Seminar of Tamil Studies. 1966, Vol. II 38-44, Kuala Lumpur.
11.
தொல்காப்பியம், சொல்லதிகாரம், சேனாவரையர் உரை, ஆறுமுகநாவலர் (பதிப்பு), வித்தியாநுபாலனயந்திர சாலை, சென்னப்பட்டணம், 1934.
12.
தொல்காப்பியம், பொருளதிகாரம், இளம்பூரணர் உரை, சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம், சென்னை, 1953.
13.
தொல்காப்பியம், பொருளதிகாரம், நச்சினார்க்கினியார் உரை, சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம், சென்னை, 1971.
14.
தொல்காப்பியம், பொருளதிகாரம், பேராசிரியர் உரை, சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம், சென்னை, 1972.
15.
பாலகிருட்டிணன், நா., 1988. தொல்காப்பியப் பொருளதிகார வழி நற்றிணை ஓர் ஆய்வு, சென்னை.
16.
பாலசுப்பிரமணியன், க., 1978, The concept of sentence structure in Tolkappiyam” in Studies in Early Dravidian Grammars, Ed. S.Agesthialingom & N. Kumaraswami Raja, Annamalai University, Annamalai Nagar. P. 23-38.
17.
பாலசுப்பிரமணியன், க., 1984. "தொல்காப்பியத்தில் நூன்மரபின் இடமும் சிறப்பும்", தமிழ்க்கலை 2:2,3, ப. 71-72. தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
18.
பாலசுப்பிரமணியன், க., 1987. "தொல்காப்பிய எழுத்ததிகார அமைப்புத் தருக்க முறை", இலக்கணக் கருவூலம்-1, தமிழ்த்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர்.
19.
பாலசுப்பிரமணியன், க., 1997. "Ancient Tamil writing system as revealed in the Tamil grammatical Literature” in K.P. Acharya (Ed.) On Writing, Central Institute of Indian Languages, Mysore, P. 34-40.
20.
பாலசுப்பிரமணியன், க. 1998. "இலக்கணத்தில் தொல்காப்பியப் பொருளதிகாரத்தின் இடம்”, ஜீன் லாறன்ஸ், கு. பகவதி (பதிப்பு), தொல்காப்பிய இலக்கியக் கோட்பாடுகள், உலகத் தமிழராய்ச்சி நிறுவனம், சென்னை.
21.
பாலசுப்பிரமணியன், க. 1999. தொல்காப்பியப் பொருளதிகாரம்: மொழிப்பொருண்மையியல் நோக்கு, டாக்டர். ரா. பி. சேதுப்பிள்ளை வெள்ளிவிழா நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவுகள், தமிழ் மொழித்துறை, சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.
22.
பாலசுப்பிரமணியன், க, 2000. "தொல்காப்பியரின் பொருண்மையியல் கோட்பாடு", தொல்காப்பிய இலக்கண மொழியியல் கோட்பாடுகள் கருத்தரங்கு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.
23.
பாலசுப்பிரமணியன், க, 2001, Studies in Tolkappiyam, Annamalai University, Anamalai Nagar.
24.
பெரியகருப்பன் இராம, 1975. சங்க இலக்கிய ஒப்பீடு, மீனாட்சி புத்தக நிலையம், மதுரை.
25.
பெரியகருப்பன், இராம. 1979, ஒப்பிலக்கிய அறிமுகம், சோலை நூலகம், மதுரை.
26.
மீனாட்சிசுந்தரன், தெ. பொ, 1969, "Tolkappiyar’s Literary Theory. Proccedings of the First International Conference Seminar of Tamil Studies, Vol. II Kualalumpur.
27.
R.H. Robins, 1967, A short History of Linguistics, Longmans, London.
28.
C.F. Hockett, 1958, A Course in Modern Linguistics, McMillan, New York.
தளத்தை இயக்கிக்கொண்டிருப்பது "விருபா வளர் தமிழ்" செயலி - Site is best viewed with Internet Explorer & 1024*768 Screen
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment