Thursday, July 9, 2009


கவிதை

ஜூலை 24, 2002 அன்று நடந்தது 'தமிழ்க் கவிதைகள்' கூட்டம். நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த திரு. எஸ். நரசிம்மன் தனது சொந்தக் கவிதையொன்றை அரங்கேற்றினார்.
வண்ணங்கள் பல கொண்ட எண்ணங்கள் ஆயிரத்தைஇதயமாம் கோயிலிலே நிதியமாய்ச் சேர்த்து வைத்தேன்ஆசை கொண்டு விட்டதனால் அடிக்கடி திறந்து பார்த்தேன்
எப்படி எல்லோருக்கும் காதல் வருகிறதோ, அதே போலக் கவிதையும் வரும் என்றார். எனில், நல்ல கவிதை எழுத சிலராலேயே முடிகிறது என்றார். கூட்டத்தில் கவிதையின் அழகுணர்ச்சி, சொற்கட்டு, ஆழம், வீச்சு என்று பல கோணங்களில் கருத்துக்களைப் பேச்சாளர்களும், தொடர்ந்து நடந்த கலந்துரையாடலில் பேசியவர்களும், கவிதை வாசித்தவர்களும் பகிர்ந்து கொண்டார்கள்.
திரு. மு. இராமனாதன் புதுக் கவிதையின் சில பரிமாணங்கள் என்ற தலைப்பில் பேசினார். கவிதை வாசகனுக்கு ஒரு அனுபவத்தைத் தர வேண்டும். அந்த அனுபவத்தப் பெற வாசகன் தொடர்ந்து கவிதைகளின் பின்னால் போய்க் கொண்டே இருக்க வேண்டும் என்று சொன்னார். அவர் பிரதானமாகச் சொன்னது ஒரு கவிதைதான் என்றாலும் அது பற்றிய விளக்கம், அந்தக் கவிதையின் முழு வீச்சையும் வெளிக்கொணர்ந்தது.
கவிஞர் விக்ரமாதித்யனின் "கோயிலுக்கு" என்கிற கவிதையை வாசித்து, அதில் எப்படி கவிஞர், கவிதை நெடுக நெல்லையப்பர் கோவிலைப் பற்றி வர்ணனை செய்து விட்டு, கடைசி வரியில் கவிதையை உச்சம் கொள்ளச் செய்கிறார் என்று விவரித்தார்.
வாசல் நான்குசந்நிதி இரண்டுசுயம்புலிங்கம்சொல்ல ஒரு விசேஷம்அம்மன்அழகு சுமந்தவள்ஆறு காலபூஜை நைவேத்தியம்பள்ளியறையில்பாலும் பழமும்ஸ்தலவிருக்ஷம் பிரகாரம்நந்தவனம் பொற்றாமரைக்குளம்வசந்தோற்சவம் தேரோட்டம்நவராத்திரி சிவராத்திரிபட்டர் சொல்லும் மந்திரம்ஓதுவார் சொல்லும் தேவாரம் திருவாசகம்சேர்த்துவைத்த சொத்து வந்து சேரும் குத்தகைஆகமம் ஆசாரம் தவறாத நியமம்தெய்வமும் ஐதீகத்தில் வாழும்
நாம் எல்லோரும் ஒரு "அமைப்பு"க்குள் இருக்கிறோம். பிறப்பு, இளமை, கல்வி, காமம், குடும்பம், வேலை, சந்ததி என்று ஏற்கனவே நிறுவப்பெற்ற அரங்கிற்குள் நின்று ஆடுகிறோம். எழுதப்படாத நியதிகள் நம்மைச் செலுத்துகின்றன. இந்த அமைப்பு (System) நமக்கு வசதியாக இருக்கிறது. இந்த அமைப்பை மீறுபவர்கள் கேலிக்கு உள்ளாகிறார்கள். துயரப்படுகிறார்கள். எல்லாவற்றையும் இந்த அமைப்பிற்குள் கொண்டுவர இந்தச் சமூகம் எத்தனிக்கிறது. இதற்கு தெய்வமும் விதி விலக்கல்ல. மனிதன் தெய்வத்தின் நியதிகளையும் நிச்சயிக்கிறான். மனிதனின் உலகில் தெய்வமும் ஐதீகத்தில் வாழும், அல்லது வாழ வேண்டும். விக்ராமாதித்யனே இந்தக் கவிதையைப் பற்றிப் பின்னொருக்கில் பேசியபோது, “கடைசி வரிகளான 'தெய்வமும் ஐதிகத்தில் வாழும்' என்பதுதான் உள்ளபடியே கவிதை வரிகள்; அதுதான் கவிதையே. மற்ற வரிகள் எல்லாம் விவரணங்களும் தகவல்களும் தான்" என்று சொல்லியிருக்கிறார். பேச்சாளர் தொடர்ந்து இந்தக் கவிதையின் கட்டுமானச் சிறப்பைப் பற்றியும் விவரித்தார். தொடர்ந்து, 'இன்னும் நிறையக் கவிதை சொல்லவேண்டி இருக்கிறது' என்றார். ஆனால் காலம் கருதி, மனுஷ்யபுத்திரனின் பின் வரும் கவிதையைச் சொல்லி விடை பெற்றார்:
ஒரு முத்தத்தை இட்டு முடிப்பதற்குள்ஒரு கரம் பற்றுதலின் வெம்மையை உணர்வதற்குள்ஒரு சரியான பிரிவுச் சொல்லைத் தேர்ந்தெடுப்பதற்குள்நேரமாகி விட்டது.
அடுத்ததாக, திருமதி. எஸ். வைதேஹி பெண் கவிஞர்கள் - அவர்களது பாடு பொருள் என்ற தலைப்பில் பேசினார். "பெண்" எப்போதும் அதிகம் கவனம் பெறுகிறாள். அதுவும் பெண் கவிஞர்கள் - என்ன சொன்னாலும் அது உன்னிப்போடு கவனிக்கப்படுகிறது. அவளது பாடுபொருளை வைத்து அன்றைய சமுதாயத்தின் நிலை கணிக்கப்படுகிறது. ஒரு ஆண் எழுதுவது அவனது சொந்த அனுபவமாக இருக்க வேண்டியதில்லை. ஆனால் ஒரு பெண் கவிஞரது படைப்புக்கள் எல்லாமே அவரது அனுபவம் என்ற ஒரு கருத்து இருக்கிறது.
சங்க காலத்து அவ்வைகளுக்கும் இதேபோல் சங்கடங்கள் இருந்தன. அவர்களுக்குக் கவிதை புனையும் வாய்ப்புக்கள் குறைவே. அதாவது, தலைவன், தலைவி, காதல், வீரம், போர் என்றும் அல்லது கல்வி, அன்பு, ஒழுக்கம் என்றும் மிகவும் பொதுவான கருத்துக்கள்தாம் கவிதையாகின. ஆனால், இன்றையக் கவிஞர்கள் அப்படி அல்ல. நாள் தோறும் பிரச்சனைகளில் அடி பட்டு, மிதி பட்டு அவர்களது உணர்ச்சிகள் கவிதைகளாகின்றன. முன்பு யாராலும் எண்ணிப்பார்க்க முடியாதவை இப்போது கவிதைகளாக வெளிப்படு கின்றன. வெளியே சொல்லக் கூச்சம் காட்டுகிற சிலவும் கவிதையாகப் பதிவாகின்றன. காமம், மாத விடாய், அறுவை சிகிச்சை - இதைப் பற்றியெல்லாம் எழுத முடிகிறது. தற்காலத்திய சமுதாயத்தின் வலி, எரிச்சல், வேதனை, சில நேரங் களில் சுகம் என்று பல்வேறு நிலைகளை அப்பட்டமாக எடுத்துக் காட்டுவதால், பாடு பொருள் கவனம் பெறுகிறது. சங்காலத்தை விட, இப்போது உரிமைக்குரல் உரக்கக் கேட்கிறது. தொடர்ந்து, கவிஞர் வெண்ணிலாவின் கவிதையை வாசித்துக் காட்டினார்.
மிதியடிச் சப்தத்தை மிதப்படுத்துஅழைப்பு மணியோ கதவுத்தட்டலோ யோசித்து மெதுவாகச்செய்'யாரு வூட்லே?' என்று கூவுமுன் குரலை மென்மையாக்குநீ நுழையும் எந்த வீட்டினுள்ளும் குழந்தை தூங்கிக் கொண்டிருக்கலாம்
சங்கடம் என்று சொல்லி தவிர்த்து வந்த சில எண்ணங்கள் இன்று துணிவோடு கவிதைக்குப் பாடு பொருள் ஆவது பற்றி கவிஞர் ஜெயராணியின் ஒரு கவிதையைச் சொன்னார். கடைசியாக, ஆண்-பெண் சம உரிமையைப் பாடும் வத்சலாவின் கவிதையை வாசித்துத் தன் உரையை நிறைவு செய்தார்.
'நதியில் விளையாடி கொடியில் தலை சீவி' வரும் திரைப்படக் கவிதைகள் பற்றிப் பேச, அடுத்து திருமதி. சித்ரா சிவக்குமாரை அழைத்தார் நரசிம்மன். முதல் முறையாக இலக்கிய வட்ட மேடையேறிய சித்ரா, அந்த நாள் முதல் இந்நாள் வரை, என். எஸ். கே. முதல் ரஜினி வரை, கண்ணதாசன் தொடங்கி வைரமுத்து முடிய பலரின் திரைப் பாடல்களை ரசித்து அதன் கவிதை வரிகளைக் கோடிட்டுக் காட்டினார்.
தொடர்ந்து நடந்த கலந்துரையாடலில் பார்வையாளர்கள் பலரும் தங்களுக்குப் பிடித்த கவிதைகளைப் பகிர்ந்து கொண்டார்கள். நரசிம்மன் ஹைக்கூ பற்றிப் பேசினார். Suggestive and Compressed Verses என்று சொல்லப்படும் ஹைக்கூ வழக்கமாக மூன்று வரிகளில் முடிபவை. முதலில் முயன்ற ஜப்பானியர் Boshu(1644). அவரது கவிதை -
On the back of the mirrorA spring unseenA flowering plum tree
ஹைக்கூவின் தமிழ் வடிவங்களைப் பற்றிப் பேசிய நரசிம்மன் சொன்ன எடுத்துக் காட்டுகளுள் ஒன்று:
எத்தனையோ பேர் இழுத்தும்
இன்னும் வரவில்லை
சேரிக்குள் தேர்.
தொடர்ந்து நடந்த கலந்துரையாடலில் 'அழகு என்பது எப்படி அவரவர் மனம் சார்ந்ததோ அதே போல் தான் கவிதையும் என்பது உண்மையா?' என்ற கேள்வி எழுந்தது. 'நல்ல கவிதை என்பது எது?' என்று கேட்டார் நரசிம்மன். இதற்குப் பார்வையாளர் பகுதியில் இருந்து விடையளித்த திரு. எம். ஸ்ரீதரன், 'அப்படி எல்லாம் பட்டியல் போட்டு கவிதையை விளக்க முடியாது. கைதட்டல் வாங்குவதனால் மட்டுமே ஒரு கவிதை சிறந்த கவிதை ஆகிவிட முடியாது' என்று கூறினார்.
கவிதை வரிகளில் சொல்லப்பட்டதைவிட சொல்லப்படாதவைதான் முக்கியம் என்று கருத்து பொதுவாக எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதையே முடிவுரையாகச் சொல்லிக் கூட்டத்தை நிறைவு செய்தார் நரசிம்மன்.

சேரல்
வாழ்க்கையின் ஒவ்வொரு துளியையும் ரசித்துப் பருகும் சாதகப் பறவை நான்..... அடுத்த நொடியில் நிகழப் போகும் அதிசயத்தை ஆலிவ் இலைகளோடும், ஆவாரம்பூக்களோடும் வரவேற்கிறேன்....ஒவ்வொரு நொடியிலும்!
மு. மேத்தா (பிறப்பு: செப்டம்பர் 5, 1945) பெரியகுளத்தில் பிறந்தார். இவர் சென்னை மாநிலக்கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். புதுக்கவிதைக்கு ஏற்றம் தந்த கவிஞர்களுள் இவரும் ஒருவராவார்

No comments:

Post a Comment