
ஒழுக்கமுடைமை
ஒழுக்கமாக வாழும் வாழ்க்கை தவம்
ஒழுக்கம் கெட்டு வாழும் வாழ்க்கை சவம்;
ஒழுக்கம் என்து பண்பாடு மட்டும் அன்று
ஒழுக்கம் என்பது உயிர் சார்ந்தது இன்று!
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஈரடி வெண்பாக்களால், 1330 அரும்பாக்களைப் புனைந்து, அவற்றை முப்பாலாகத் தொகுத்து வள்ளுவப் பெருந்தகை வழங்கிச் சென்றுள்ள அட்சய பாத்திரம் "திருக்குறள்" எனும் கருத்துப் புதையல். அது மொழி, மதம், இனம், நாடு என அனைத்தும் கடந்து "எல்லை தாண்டிய தமிழ் இலக்கிய உலகப் பொது மறை" ஆகும்.
அந்த முப்பாலில் ஒரு பாலான அறத்துப்பாலில் அழகாய் தருவித்த அருங்களஞ்சியங்களில் ஒன்றுதான் ஒழுக்கமுடைமை. பத்து பாக்களையும் அழகாய் உயிர்ப்பித்து, அர்த்தம் பொதிந்த அழகுறும் வரிகளில் அற்புதமான கருத்துகளை வழங்கியுள்ளார் தெய்வப்புலவர் திருவள்ளுவர்.
ஒழுக்கம். ஆம்! ஒழுக்கம் என்பது ஒழுங்கு என்ற பொருள் அடிப்படையில் தோன்றியது. ஒழுங்கு என்பது முறையாகச் செய்தலைக் குறிக்கும் சொல் ஆகும். முறையான வாழ்க்கையின் நிலைப்பாடுதான் ஒழுக்கம். மனித வாழ்வில் ஒழுக்கத்தை ஏற்படுத்துவதுதான் அறத்துப்பாலில் ஒழுக்கமுடைமையின் நோக்கமாகும். தனிமனித ஒழுக்கம், சமுதாய ஒழுக்கம் என்னும் இருநிலைகளைக் கொண்டது. மனிதன் சமுதாயமாகக் கூடி வாழும் இயல்பு கொண்டவன். ஒவ்வொரு தனி மனிதனும் தத்தமக்கு உரிய ஒழுக்க நெறிப்படி வாழ்ந்தால் சமுதாயத்தில் ஒழுக்கம் நிலவும். இருப்பினும் சமுதாயத்தில் ஒருவருக்கு ஒருவர் கருத்து வேறுபாடு இல்லாமல் கலந்து வாழ்வதற்கு சில பொதுவான ஒழுக்க நெறிகளைப் பின் பற்ற வேண்டும். அந்த ஒழுக்க நெறிகளைதான் ஒழுக்கமுடைமையாக நமக்கு அளித்துள்ளார் தெய்வப்புலவர்.
கல்விக்கு இரண்டாம் இடம் தந்து
ஒழுக்கத்திற்கு முதல் இடம் தந்தார்;
ஒழுக்கத்தை உயிருக்கு மேலாக உயர்த்தி
உலகப் பொதுமறை படைத்தார் திருவள்ளுவர்!
தமது 131வது குறளில் ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும் என்று கூறுகிறார் ஐயன் வள்ளுவன். ஒரு தனி மனித வளர்ச்சிக்கு ஒழுக்கம் உறுதுணையாக இருப்பதால் அவ்வொழுக்கம் உயிரை விடவும் உயர்ந்ததாகப் போற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். குறுக்கு வழியில் வந்த வளர்ச்சினால், தீய பழக்க வழக்கங்களில் ஈடுபட்டு ஒழுக்கம் கெட்ட செயல்களினால் வாழ்விழந்து போனவர்கள் பலர். தீய வழியில் வந்தது தீய வழியிலேயே அழிந்ததை எண்ணிப் பார்த்தால் ஒழுக்கத்தின் மேன்மை விளங்கும். இதனை மிகவும் அழகாக ஈரடி வெண்பாவில் பாடியுள்ளார் வள்ளுவர் பெருந்தகை.
நூற்றாண்டுகள் கடந்த பின்னும் நிலைத்தார்
நம் காந்தியடிகள் காரணம் நல்ஒழுக்கம்;
கர்மவீரர் காமராசர் பிரம்மச்சாரியாக வாழ்ந்தார்
கல்வி வள்ளல் ஒழுக்கச்சீலராக வாழ்ந்தார்!
ஐயன் வள்ளுவன் தமது 132வது குறளில் பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித் தேரினும் அஃதே துணை என்று கூறியுள்ளார். ஆம்! எந்தெந்த வழிகளில் ஆராய்ந்தாலும் வாழ்க்கையில் ஒழுக்கமே சிறந்த துணை என்பதால், எத்தகைய துன்பத்தை ஏற்றாவது அதைக் காக்க வேண்டியது திண்ணம் என்று வலியுறுத்தியுள்ளார்.
ஒரு மனிதனுக்கு நிம்மதியைத் தராத, மகிழ்ச்சியை மலரச் செய்யாத, ஆனந்தத்தை அளிக்காத எதுவும் முன்னேற்றமாக இருக்க முடியாது. எள் முனையளவும் முன்னேற்ற மாயினும் அதன் மிச்சம் நிம்மதிதான். அறவழியில் வராத எதுவும் நிலைத்த ஆனந்தத்தை ஒருபோதும் அளிக்காது. இதுதான் இயற்கையின் நியதி. ஒழுக்கமற்ற தீய வழிக்கு முடிவு ஐயமின்றி அழிவுதான். எனவே, வாழ்க்கையின் நிம்மதி, வளர்ச்சிக்கு அடிப்படை ஒழுக்கம்தான் என்பதை தெளிவுற கூறுகிறார் வள்ளுவனார்.
பண்புகளில் சிறந்த பண்பு ஒழுக்கம்
பண்பாட்டைப் பறை சாற்றுவது உயர்ந்த ஒழுக்கம்;
தனி மனித ஒழுக்கம் சமுதாய ஒழுக்கமாகும்
சமுதாய ஒழுக்கம் நாட்டின் ஒழுக்கமாகும்!
வள்ளுவப் பெருமான் ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும் என்று தமது 133வது குறளில், ஒழுக்கம் உடையவராக வாழ்வதுதான் உயர்ந்த குடிப்பிறப்புக்கு எடுத்துக்காட்டாகும். ஒழுக்கம் தவறுகிறவர்கள் யாராயினும் அவர்கள் இழிந்த குடியில் பிறந்தவர்களாகவே கருதப்படுவர் என்று பொருள்படக் கூறியுள்ளார். ஒருவன் ஒழுக்கம் தவறிய நெறிகளால் தம் சந்ததியினரையே கீழ்ப்படுத்தும் நிலைக்கு ஆளாக்குவது அவன் குடும்பத்தினருக்கு அவன் செய்யும் பேரிழுக்காகும் என்பதில் ஐயமில்லை. ஒழுக்கத்திற்கு மாறாக செயலாற்றிய எத்தனையோ பேர்களின் குடும்பம் திசைமாறிய வரலாறு நமக்கு சாட்சியாக காட்டுகிறதே!
ஒருவருக்கு எல்லாம் இருந்தும் உயர்ந்த
ஒழுக்கம் இல்லை என்றால் பயனில்லை;
ஒழுக்கம் இருந்து ஏழையாக இருந்தாலும்
உயர்ந்த புகழ் தேடி வந்து சேரும்!
மேலும், மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான் பிறப்பொழுக்கங் குன்றக் கெடும் என்று தமது 134வது குறளில் வடித்துள்ளார். அதாவது ஒரு பார்ப்பனன் தாம் கற்றதை மறந்துவிட்டால் மீண்டும் படித்துக் கொள்ள முடியும்; ஆனால், பிறப்புக்குச் சிறப்பு சேர்க்கும் ஒழுக்கத்திலிருந்து அவன் தவறினால் இழிமகனே ஆவான். மேன்மக்களாய், பட்டறிவு மிகுந்த கல்வியாளனாக இருந்தாலும் ஒழுக்க சீலனாக இல்லாவிட்டால் அவன் தாழ்த்தப்படுகிறான் என்று ஐயன் வள்ளுவன் தெறிவுறக் கூறுகிறார்.
பொறாமையுடையவனுக்கும், நல்லொழுக்கமில்லாதவனுக்கும் அமையும் வாழ்வு, உயர்வான வாழ்வாகக் கருதப்பட மாட்டாது என்று பொருள் படும் விதத்தில் தமது 135 குறளில் அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை ஒழுக்க மிலான்கண் உயர்வு என்று அழகாக வடித்துள்ளார் வள்ளுவனார்.
தொடர்ந்து மன உறுதி கொண்டவர்கள் ஒழுக்கம் தவறுவதால் ஏற்படும் இழிவை உணர்ந்திருப்பதால், நல்லொழுக்கம் குன்றிடுமளவிற்கு நடக்க மாட்டார்கள். ஆம்! அக ஒழுக்கம் உள்ளவர்களுக்கு மன வலிமை அதிகம் என்பர். அவர்களால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டு மகாத்மா காந்தி அவர்கள். காந்தியடிகளுக்குத் துணையாக இருந்தது அவரது அக ஒழுக்கம்தான். அடிப்படை அறம்தான். அதனால் குறிக்கோளை அடைய விரும்புவோர் அடிப்படை அறத்தை, ஒழுக்கத்தை உயிர் மூச்சாகக் கொள்ள வேண்டும். அதனைதான் தமது 136வது குறளில் ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின் ஏதம் படுபாக் கறிந்து என அழகாக கூறியுள்ளார் வள்ளுவர் பெருமான்.
ஒழுக்கம் என்பது பால் போன்றது
ஒழுக்கக்கேடு என்பது விசம் போன்றது;
ஒருகுடம் பாலில் ஒரு துளி விசம் கலந்தாலும் விசம்
ஒழுக்கமாக வாழ்க்கையில் ஒருநிமிடம் சபலப்பட்டாலும் சஞ்சலம்!
நல்ல நடத்தையினால் உயர்வு ஏற்படும்; இல்லையேல் இழிவான பழி வந்து சேரும் என 137 வது குறளில் ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி என்ற வெண்பாவில் குறிப்பிட்டுள்ளார். ஆம்! முன்னேறத் துடிப்பவர்கள் முப்போதும் சோர்ந்திடாது உழைப்பார்கள். ஆனால் பலர் மிகக் கால எல்லையில் அத்தனையும் அடைந்துவிட பேராசைப்படுவார்கள். முன்னேற்றம் மெதுவாக இருந்தாலும் நேரிய வழியிலும் சீரிய வழியிலும் வந்தால் ஒழிய அது நிலைத்த வெற்றியை நல்காது. இவ்விடம் ஒழுக்கம் நிலைபெறாவிட்டால் பல இழிச்சொற்கள் தானாக வந்து சேருமென்பது வெள்ளிடைமலை.
எதை இழந்தாலும் திரும்ப பெற்றுவிடலாம்
ஒழுக்கத்தை இழந்தால் எல்லாம் போய்விடும்;
நல்லவர் என்ற பெயரை பெற்றுத்தருவது
நாடு போற்றும் நல்ஒழுக்கம் ஆகும்!
மேலும் தமது 138வது குறளில் நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும் என கூறியுள்ளார். நல்லொழுக்கம், வாழ்க்கையில் நன்மைக்கு வித்தாக அமையும். தீயொழுக்கம், தீராத துன்பம் தரும் என்று ஐயன் கூறுவதில் ஐயமில்லை. உதாரணமாக இந்த அவசர உலகில் எல்லாம் உடனே நடந்துவிட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். நிகழாமல் போனால் குறுக்கு வழியில் சென்றேனும் கோடீஸ்வரனாகிவிட வேண்டும் என்று முன்னேற்றத்தைத் தவறாக எண்ணி முடிக்கிறார்கள். இவர்கள் பார்வையில் பொருளாதாரமே முன்னேற்றத்தின் முடிவான அளவு கோலாகக் கருதப்படுகிறது. வாழ்க்கையின் வசதிகளைப் பெருக்கிக் கொள்ள, ஆடம்பர வாழ்க்கையின் அத்தனை சுகத்தையும் அணுஅணுவாக அனுபவிக்க தார்மீக நெறிகளையும், தன்னொழுக்கம் என்னும் அறவழியையும் அலட்சியப்படுத்திவிட்டு, பொருள் நுகர்ச்சி என்னும் போதையில் ஒழுக்கத்தைப் புதைத்துவிட்டு மிருக வெறியோடும் அலைகிறார்கள். குறுக்கு வழியில் கோடிகளை மட்டும் சேர்த்த பலர் தற்காலிகமாக பகட்டாக வாழ்வதாக தோன்றினாலும், நம் கண்முன்னாலேயே வீழ்ந்துபட்ட வரலாற்றைக் கண்டுதானே இருக்கிறோம். தீய வழியில் வரும் பொருளை பெரிதாக எண்ணாமல் ஒழுக்கத்தை உயிராக கருதி செயலாற்றினால் நாம் வாழ்வின் லட்சியத்தை அடைய முடியும்.
எத்துணை பெருமைகள், திறமைகள் இருந்தாலும்
ஒழுக்கம் இல்லை என்றால் மதிப்பதில்லை யாரும்
நல்ல பெயர் வாங்குவது மிகவும் கடினம்
கெட்ட பெயரை விரைவாக பெற்றுத்தரும் ஒழுக்கக்கேடு!
அதுமட்டுமல்லாமல் குறள் 139-ல் ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய வழுக்கியும் வாயாற் சொலல் என்ற வெண்பாவில் தவறியும்கூடத் தம் வாயால் தகாத சொற்களைச் சொல்வது ஒழுக்கம் உடையவர்களிடம் இல்லாத பண்பாகும் என்னும் பொருள் விளங்கக் கூறியுள்ளார் வள்ளுவனார். பேசாத வார்த்தை உனக்கு எசமான்; பேசிய வார்த்தைக்கு நீ எசமான் என்ற சொல் வழக்கில் உள்ளது போல், ஒவ்வொரு செயலுக்கும் நம் நாவே காரணம் என்பது பொதுவான கருத்து. ஓர் ஒழுக்கச் சீலரின் வாயிலிருந்து ஒரு தீச்சொல் கூட வரலாகாது என்பதைதான் இவ்வெண்பாவில் அழகாய் எடுத்துரைத்துள்ளார் வள்ளுவப் பெருமான்.
கோடிப்பணம் கொட்டிக்கிடந்தாலும்
ஒழுக்கம் இல்லை என்றால் ஏழைதான் அவன்
பணம் எதுவுமின்றி ஏழையாக இருந்தாலும்
ஒழுக்கத்தோடு வாழ்ந்தால் அவன் குபேரன்தான்!
ஒழுக்கத்தின் பத்தாவது வெண்பாவான 140 குறளில் உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலா தார் என்றும், உயர்ந்தோர் ஏற்றுக் கொண்ட ஒழுக்கம் எனும் பண்போடு வாழக் கற்காதவர்கள் பல நூல்களைப் படித்திருந்தும்கூட அறிவில்லாதவர்களே ஆவார்கள் என்று பொருள் விளங்கவும் கூறுகிறார்.
கண்ணகியும் சீதையும் ஒழுக்கமுடன் வாழ்ந்ததால்
கணினியுகத்திலும் போற்றுகின்றோம் அவர்களை;
மாதவியும் சூர்ப்பநகையும் ஒழுக்கம் தவறியதால்
மண்ணில் இன்றும் பழிக்கிறார்கள் அவர்களை;
இராமன் ஒழுக்கமுடன் வாழ்ந்ததால் கடவுள் ஆனான்
இராவணன் ஒழுக்கம் தவறியதால் அரக்கன் ஆனான்;
ஒழுக்கத்தோடு வாழ்பவனுக்குப் பெயர்தான் மனிதன்
ஒழுக்கம் தவறி வாழ்பவன் மனிதனா? சிந்தியுங்கள்!